தமிழகச் சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, முதலமைச்சர் ஸ்டாலினின் கோட்டையாக கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் அவர் சந்தித்த தோல்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொளத்தூரில் சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் ‘SIR’ முறை மூலம் நீக்கப்பட்ட நிலையில், தனது சொந்த தொகுதியிலேயே இப்படி ஒரு நுணுக்கமான தேர்தல் வியூகம் செயல்படுத்தப்படுவதை ஸ்டாலின் முன்கூட்டியே கவனிக்க தவறியது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் நடந்த மாற்றங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட இளைய தலைமுறை தலைவர்கள் எச்சரித்த போதிலும், ஸ்டாலின் தனது வெற்றியை மிக சாதாரணமாக எண்ணிவிட்டார் என தெரிகிறது. கொளத்தூர் தொகுதியில் தனக்கு இருக்கும் செல்வாக்கு எந்த சூழ்ச்சியையும் முறியடிக்கும் என்ற அதீத நம்பிக்கையில் அவர் இருந்திருக்கிறார். வாக்காளர் பட்டியலில் இவ்வளவு பெரிய அளவில் கைவரிசை காட்டப்பட்டிருப்பது தெரிந்திருந்தும், அவர் அந்த தொகுதியிலேயே பிடிவாதமாக நின்றிருக்க வேண்டியதில்லை என்றும், இன்னும் பாதுகாப்பான இடத்தைத் தேடியிருக்கலாம் என்றும் பேச்சுக்கள் எழுகின்றன.
உதாரணமாக, தி.மு.க-விற்கு எப்போதும் சாதகமாக இருந்து வரும் துறைமுகம் தொகுதியை கடந்த காலங்களில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பாதுகாப்பான புகலிடமாகப் பயன்படுத்தியுள்ளனர். இம்முறை கொளத்தூரில் ஆபத்து இருப்பதை உணர்ந்திருந்தால், ஸ்டாலின் எளிதாக துறைமுகம் தொகுதிக்கு மாறியிருக்க முடியும். ஆனால், “சொந்தத் தொகுதியை விட்டு மாறினால் அது பலவீனமாக கருதப்படும்” என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கொடுத்த தவறான ஆலோசனையே ஸ்டாலினை இந்த இக்கட்டான நிலைக்கு தள்ளியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலினை சுற்றி இருந்த ஒரு குறிப்பிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், கள நிலவரத்தை துல்லியமாகத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக உதயநிதி தரப்பு குற்றம் சாட்டுகிறது. “தலைவரே… பயப்பட தேவையில்லை, கொளத்தூரில் நீங்கள் இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வீர்கள்” என்று அவர்கள் கொடுத்த போலி வாக்குறுதிகளை நம்பி ஸ்டாலின் ஏமாந்துவிட்டார். வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதை சரிசெய்யவோ அல்லது அதற்கு போராட்டங்கள் நடத்தவோ வாய்ப்பு இருந்தும், அதனை தலைமை கண்டுகொள்ளாமல் விட்டது மிகப்பெரிய வரலாற்று தவறாக பார்க்கப்படுகிறது.
இந்த தோல்வி என்பது வெறும் ஒரு தொகுதி தோல்வி மட்டுமல்ல, இது ஸ்டாலினின் அரசியல் மேலாண்மைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு. ஒருபுறம் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி, மறுபுறம் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் என இருமுனை தாக்குதல்களை சந்தித்த போது, ஸ்டாலின் பழைய பாணி அரசியலையே நம்பி கொண்டிருந்தார். தொழில்நுட்ப ரீதியாகவும், தரவு ரீதியாகவும் தேர்தல் களம் மாறியிருப்பதை அவர் உணர தவறியதே எதிரிகள் எளிதாக அவர் கோட்டைக்குள் நுழைய வழிவகுத்து கொடுத்தது.
பாதுகாப்பான தொகுதியை தேர்ந்தெடுக்காமல், எதிரிகளின் வியூகத்திற்கு பலியானது ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத கறையாக அமைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் இது போன்ற ‘SIR’ முறையிலான வாக்காளர் நீக்கங்கள் மற்ற தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்பதால், கட்சியை அமைப்புரீதியாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
