தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய ஆட்சி அமையவிருக்கும் சூழலில், மாநிலத்தின் அரசியல் களம் அடுத்தகட்ட நகர்வை நோக்கி அதிவேகமாக நகர தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்திய அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே மற்றொரு தேர்தலை சந்திக்க தமிழகம் தயாராகி வருகிறது. மாநிலம் முழுவதும் காலியாகவிருக்கும் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை விரைந்து நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவும், அடிமட்ட தொண்டர்கள் வரை கட்சியின் செல்வாக்கை பலப்படுத்தவும் த.வெ.க தலைவர் விஜய் இந்த உள்ளாட்சி தேர்தலை ஒரு பொன்னான வாய்ப்பாக கருதுகிறார். சட்டமன்ற தேர்தலில் த.வெ.க-விற்கு மக்கள் அளித்த ஆதரவு என்பது ஒரு தற்காலிக எழுச்சியல்ல என்பதை நிரூபிக்க, சூட்டோடு சூடாக உள்ளாட்சி பதவிகளையும் கைப்பற்ற அக்கட்சி தலைமை தற்போதே வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டது. ஊரப் பகுதிகளில் கட்சியின் கொடியை ஏற்றி, நிர்வாக ரீதியாக வலுவடைய இதுவே சரியான தருணம் என நிர்வாகிகள் நம்புகின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரிய பல தகுதியான நிர்வாகிகளுக்கு, கூட்டணி கணக்குகள் மற்றும் தொகுதி கட்டுப்பாடுகள் காரணமாக போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாமல் போனது. இதனால் அதிருப்தியில் இருந்த அல்லது காத்திருந்த நிர்வாகிகளை சமாதானப்படுத்தவும், அவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கவும் இந்த உள்ளாட்சி தேர்தலை விஜய் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, கட்சியின் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகளுக்கு இந்தத் தேர்தலில் முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதன் மூலம், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத நிர்வாகிகளின் உழைப்பை வீணடிக்காமல் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்க முடியும் என தலைமை கருதுகிறது. இதன் மூலம் கட்சிக்குள் நிலவக்கூடிய பூசல்களை தவிர்ப்பதுடன், உள்ளூர் அளவில் செல்வாக்கு மிக்க நபர்களை தேர்ந்தெடுத்து நிறுத்துவதன் மூலம் வெற்றியை எளிதாக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் முதல் மாவட்ட கவுன்சிலர் பதவி வரை த.வெ.கவின் பிரதிநிதிகள் அமரும்போது, அது கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அஸ்திவாரமாக அமையும்.
திமுக மற்றும் அதிமுக போன்ற திராவிட கட்சிகள் உள்ளாட்சி தேர்தல்களில் எப்போதும் வலுவான பிடியைக் கொண்டுள்ளன. அவற்றை எதிர்கொள்வதற்கு த.வெ.க-விற்கு சிறப்பான களப்பணி அவசியம் என்பதை உணர்ந்துள்ள விஜய், ஒவ்வொரு வார்டு அளவிலும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்த உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலில் விஜய்க்காக உழைத்த இளைஞரணி மற்றும் மகளிர் அணியினருக்கு இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்கி கொடுத்து, புதிய தலைமுறையை உள்ளூர் அரசியலில் முன்னிறுத்தவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பிடிப்பதில் கவனம் செலுத்திய த.வெ.க, இப்போது நிர்வாக அதிகாரத்தை பரவலாக்கத் துடிக்கிறது. “மக்களுக்கான அதிகாரம் கிராமங்களில் இருந்தே தொடங்குகிறது” என்ற கொள்கையின் அடிப்படையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றுவது த.வெ.க-வின் அடுத்த இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் த.வெ.க-வின் செல்வாக்கு எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
