அக்ஷய திருதியை என்றாலே நமக்கு தங்கம் தான் நினைவுக்கு வரும். நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். இதற்கு என்ன காரணம்? அந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது? தங்கம் வாங்க உகந்த நேரம் என்ன? வாங்க விலாவாரியாக பார்க்கலாம்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது நம் வாழக்கையில் செழிப்பையும், செல்வத்தையும் தரும் என்பது ஐதீகம். அட்சய திருதியை என்றால் ‘வளர்க’ என்று பொருள். இந்த நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் மேன்மேலும் வளரும். அன்றைய தினம் கல் உப்பு. மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும்.
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் மூன்றாவதாக வரும் திதி, திருதியை. அட்சய திருதியை. 3ம் எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு ‘பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பாகிறது.
அட்சய திருதியை ஏப்ரல் 19ம் தேதி 10:49 மணிக்கு திருதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் ஏப்ரல் 20ம் தேதி காலை 07:27 மணிக்கு முடிவடையும். ஏப்ரல் 19, காலை முதல் மாலை வரை, முக்கியமாக 10:49 மணி முதல் 12:20 மணி வரை நகை வாங்க சிறந்த நேரம். இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரம்.
“அக்ஷயம்” என்றால் குறைவில்லாதது, குறையாதது. என்றும் வளர்ந்து கொண்டே இருப்பது. அந்த அக்ஷய சக்தி பூமியில் இறங்கும் அரிய நாள் தான் அக்ஷய திருதியை.
இந்த புனித நாள், செய்த நன்மைகள் பல மடங்கு பெருகும் நாள். தானம் செய்தால் அது அக்ஷய புண்ணியமாக மாறும் நாள். தொடங்கும் காரியம் நிலைத்த வெற்றியை தரும் நாள். புராணங்களில், மகாலட்சுமி அருள் பெருகும் நாள். குபேரன் செல்வம் அளித்த நாள். விஷ்ணு அவதாரங்களில் பல நிகழ்வுகள் நடந்த நாள்.
காலையில் எழுந்தவுடன் கிழக்கு நோக்கி நின்று “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே நமஹ” 108 முறை சொல்லுங்கள். உணவு, உடை, பணம் தானம் செய்யுங்கள். ஏழைகளுக்கு கொடுத்தால் அது அக்ஷய புண்ணியம். தங்கம், வெள்ளி வாங்கலாம். சிறிதளவு வாங்கினாலும் போதும். அது செல்வ வளர்ச்சி விதை. லட்சுமி படம் முன் தீபம் ஏற்றுங்கள்.
வெள்ளை பூ, பச்சை இலை வைத்து வழிபடுங்கள். வீடு வாங்குதல், புதிய வியாபாரம், முதலீடு செய்ய நல்ல நாள்.
இந்த நாளில் தொடங்கியது நிலைத்து வளரும். அதனால் இந்த புனிதமான நாளில் இதை எல்லாம் செய்து விடாதீர்கள்.சண்டை வேண்டாம். கோபம் வேண்டாம். யாரையும் காயப்படுத்தாதீர்கள். இந்த நாளில் செய்த தவறும் கூட “அக்ஷயம்” ஆகி திரும்ப வரும். கொடுத்தது குறையாது. செய்தது வீணாகாது. தொடங்கியது நின்று போகாது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



