கார் தயாரிச்சது போதும், இழுத்து மூடிட்டு எல்லோரும் ஏவுகணை தயாரிச்சு கொடுங்க.. டிரம்ப் ஃபேக்டரிக்குள்ள நுழையும்போதே முடிவு பண்ணிட்டாரு… இனிமேல் கார் கம்பெனி கிடையாது, இது காபந்து கம்பெனின்னு! ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனிகளுக்கு சிக்கலா?

அமெரிக்கா தற்போது ரஷ்யா-உக்ரைன் இடையிலான மறைமுக போர் மற்றும் ஈரானுக்கு எதிரான நேரடி போர் என இரண்டு முக்கிய முனை போர்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்நாட்டின் ஆயுத கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதாக பென்டகன்…

ford and gm

அமெரிக்கா தற்போது ரஷ்யா-உக்ரைன் இடையிலான மறைமுக போர் மற்றும் ஈரானுக்கு எதிரான நேரடி போர் என இரண்டு முக்கிய முனை போர்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்நாட்டின் ஆயுத கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதாக பென்டகன் கவலை தெரிவித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க, அமெரிக்காவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவற்றை ஆயுத தயாரிப்பில் ஈடுபடுமாறு டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் காலத்தை போலவே, தற்போதைய சூழலிலும் வர்த்தக ரீதியான தொழிற்சாலைகளை போர்க்கால தேவைக்கான உற்பத்தி தளங்களாக மாற்றும் முயற்சியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க போர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் ஃபார்லி ஆகியோருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் மிச்சிகனில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலைக்கு நேரில் சென்றதும், அதைத்தொடர்ந்து பிப்ரவரி மாதம் மேரி பார்ரா வெள்ளை மாளிகைக்கு சென்றதும் இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. இது ஒரு ஆரம்பக்கட்ட ஆலோசனை என்றாலும், நாட்டின் பாதுகாப்பு தொழிற்சாலைகளின் கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்க அரசு இருப்பதை இச்சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணம், ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் போர் நடப்பதால் தங்களின் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளின் கையிருப்பு அபாயகரமான அளவிற்கு குறைந்துவிட்டது என்ற அச்சமே ஆகும். பென்டகன் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பு தொழில்துறையை துரிதமாக விரிவுபடுத்துவதற்கும், வணிக ரீதியான தொழில்நுட்பங்களை போர்க்களத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கும் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் தவிர, விண்வெளி மற்றும் இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்களான ஜிஇ ஏரோஸ்பேஸ் மற்றும் ஓஷ்கோஷ் போன்ற நிறுவனங்களும் இந்த போர்க்காலத் தயாரிப்பு பணிகளில் இணைக்கப்படலாம் என தெரிகிறது.

இருப்பினும், இந்த உற்பத்தி மாற்றங்கள் எவ்வளவு விரைவாக சாத்தியப்படும் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. ஒரு கார் தொழிற்சாலையை ஏவுகணை தயாரிப்பு தளமாக மாற்றுவதற்கு தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் மற்றும் கால அவகாசம் தேவைப்படும்.