நாங்க என்னய்யா பாவம் பண்ணினோம்.. இப்படி அடிமேல் அடி அடிக்குறீங்களே.. அமெரிக்காவுக்கு ராணுவத்தளம் அமைக்க இடம் கொடுத்தது ஒரு தப்பா.. 30 வருஷமா சுற்றுலா நகரமாக, பாதுகாப்பான நகரமாக துபாயை கஷ்டப்பட்டு கட்டமைத்தோம்.. அதை 3 வாரங்களில் காலி பண்ணிட்டிங்களே.. இனி துபாய்க்கு யார் வருவா? தொழிலதிபர்களும் சுற்றுலா பயணிகளும் பதறிகிட்ட துபாயை விட்டே வெளியேறிட்டாங்க.. துபாய் விமான நிலையத்தை ஈரான் தாக்கியதால் புலம்பும் அரசு..

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இன்று அதிகாலை திடீரென நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அருகே அமைந்துள்ள…

dubai airport attack

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இன்று அதிகாலை திடீரென நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அருகே அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கு ஒன்றில் ட்ரோன் மோதியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வளைகுடா பிராந்தியத்தின் மிக முக்கியமான நிதி மற்றும் போக்குவரத்து மையமாக திகழும் துபாயில் நிகழ்ந்துள்ள இந்த தாக்குதல், சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் துபாய் சிவில் டிஃபென்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எரிபொருள் கிடங்கில் பரவிய தீயை அணைக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று துபாய் ஊடக அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விமான நிலைய பணியாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான சேவைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சில விமானங்கள் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. பயணிகள் தங்களது பயண திட்டங்கள் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்புகொண்டு உறுதிப்படுத்தி கொள்ளுமாறு துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மீண்டும் விமானங்கள் எப்போது இயக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் இதுவரை 1,800-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த போரில் அதிக இலக்குகளை சந்தித்த நாடாக அமீரகம் மாறியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் சொத்துக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்தே நடத்தப்படுகின்றன. அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து அழித்தாலும், இன்றைய ட்ரோன் சம்பவம் பாதுகாப்பு குறித்த புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானின் தலைமை மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே ஈரான் இந்த தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக வளைகுடா நாடுகளில் நிலவி வரும் இந்த அசாதாரணமான சூழல், சர்வதேச கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முக்கியமான உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதன் மூலம் வளைகுடா பகுதியின் பொருளாதாரத்தை நிலைகுலைய செய்ய ஈரான் முயல்வதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தற்போது வரை நிகழ்ந்துள்ள மோதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நான்கு பொதுமக்கள் மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ராணுவ வீரர்கள் இருவர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இந்த சூழலில், துபாய் போன்ற உலகத்தரம் வாய்ந்த நகரங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது சர்வதேச நாடுகளுக்குப் பெரும் சவாலாகவே நீடிக்கிறது.