நமக்கும் ரஷ்யா நிலைமை வந்துவிடுமா? உக்ரைன் தாக்குதலால் அச்சத்தில் சீனா.. யாரை பார்த்து இந்த பயம்?

  ஒரு சிறிய நாடான உக்ரைன் பக்காவாக பிளான் போட்டு ரஷ்யாவை தாக்கி நிலைகுலைய செய்த நிலையில், இதே நிலைமை நமக்கும் வந்து விடுமோ என்ற அச்சத்தில் சீனா இருப்பதாகவும், குறிப்பாக தைவான் நாட்டை…

china

 

ஒரு சிறிய நாடான உக்ரைன் பக்காவாக பிளான் போட்டு ரஷ்யாவை தாக்கி நிலைகுலைய செய்த நிலையில், இதே நிலைமை நமக்கும் வந்து விடுமோ என்ற அச்சத்தில் சீனா இருப்பதாகவும், குறிப்பாக தைவான் நாட்டை பார்த்துத்தான் பயத்தில் இருப்பதாகவும் சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ என்று அழைக்கப்பட்ட உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் நடவடிக்கை, ரஷ்யாவை நிலையை சீர்குலைத்தது. ரஷ்யாவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டன என்பதும், உக்ரைன் எல்லையிலிருந்து 4000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தாக்குதல் ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இன்றி, ரஷ்யா மற்றும் சீனா எல்லை அருகில் இருந்த அமூர் என்ற பகுதியிலும் உக்ரைனில் இருந்து சுமார் 8000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதியிலும் —ஒரு தளம் தாக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலின் வெற்றி சீனாவை யோசிக்க வைத்துள்ளது. ஏற்கனவே சீனா மற்றும் தைவான் இடையே பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், இதே போன்ற ஒரு தாக்குதல் சீனா மீது நடக்குமோ என்ற அச்சத்தில் சீனா இருப்பதாக கூறப்படுகிறது.

உக்ரைன் நாட்டின் இந்த தாக்குதல், ரஷ்யாவை தாண்டி தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது என சீனாவின் முன்னாள் விமானப்படை தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவின் எதிரிகள் இதே போன்ற தாக்குதலை உருவாக்க வாய்ப்பு இருப்பதால், அதை முன்கூட்டியே கணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சீனாவும், ரஷ்யாவைப் போலவே, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் தன்னுடைய ராணுவ தளங்களை வைத்துள்ள நிலையில், அதன் பாதுகாப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, ட்ரோன்கள் தொழில்நுட்பமே அனைத்து நாடுகளையும் அச்சப்படுத்தி வருகிறது. ட்ரோன்கள் மூலம் எவ்வளவு தொலைவு இருந்தாலும், அதை மிக எளிதில் தாக்கும் வகையில் தற்போது தொழில்நுட்பம் உருவாகியுள்ளது.

குறிப்ப்பிட்ட இலக்குகளை ட்ரோன் மூலம் தாக்குதல், மிகவும் வேகமாகவும், எதிரி நாட்டிற்கு தெரியாமல் தாக்கும் வகையில் இருப்பதால், பல நாடுகள் தற்போது அச்சத்தில் உள்ளன. எனவே, தைவான் மற்றும் இந்தியாவிடம் இருந்து தன்னை பாதுகாக்க, சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீன பத்திரிகை ஆசிரியர்கள் எழுதி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.