கவலை இல்லாத மனிதன் உலகில் இல்லை என்பார்கள். ஆனால் பெரிய அறிஞர் ஒருவர் அப்படி இருந்துள்ளார். அவர் யார்? என்ன சொன்னாருன்னு பாருங்க…
“இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழக் கற்றுக் கொள்” “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” “பொறுத்தார், பூமியாள்வார்” இப்படிப் பல பழமொழிகள், நம் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருந்துமாறு நம் முன்னோர்கள் சொல்லிச் சென்று இருக்கிறார்கள்.
இருந்தாலும் நம் மனம் ஏதோ ஒரு நினைவில் சிக்கிக் கொண்டு அதைப் பற்றியே கவலை கொள்கிறது. அதில் இருந்து மீள்வது இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமான கவலைகள் இருக்கிறது. ஏன் கவலை? நாம் நினைத்தது அல்லது எதிர்ப்பார்த்தது நடைபெறவில்லை என்றால், கவலை நம்மை ஆட்கொள்ளும்.
இந்த உலகில் கவலை இல்லாமல் மனிதர்கள் எங்கேயும் இருக்க முடியாது.. இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். கவலைப்படும் போது அதைப் பற்றியே நினைத்துக் கொண்டே இருப்பார்கள்..
நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள்..என்ன செய்வது என்று தெரியாமல் படபடப்புடன் எப்போதும் காணப்படுவார்.. இந்தக் கவலைகள் என்பது ஒரு மனிதனுக்குப் புற்றுநோயைப் போன்றது. புற்றுநோய் கிருமிகள் எப்படி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு விரைவாக பரவுகின்றதோ, அதைப் போன்று கவலை என்பது ஒரு கவலை போய் இன்னொரு கவலையை உண்டாக்கும் சக்தி கொண்டது.
கவலைகளை நம்முடைய மனத்துக்கு உள்ளேயே போட்டு அழுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும். இதனால் மனச்சோர்வும், மனச்சோர்வினால் மேலும் கவலைகளும் ஏற்படலாம். எதற்கு, எது காரணம் என்கிற ஆராய்ச்சியை எல்லாம் விட்டு விட்டு அதில் இருந்து விலகி நின்று, வாழ்க்கைப் பிரச்சினைகளை எப்படி வெற்றிகரமாக சமாளிப்பது என்பதே முக்கியம்.
எந்த ஒரு இக்கட்டான சூழலையும் நம்மால் சமாளிக்க முடியும். எதையும் தீர அலசி ஆராய்ந்தால் தீர்வு கிடைக்கும். வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் ஒருமுறை ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது, கவலைப்படுவதற்கு எனக்கு நேரம் இல்லை என்றார். இதைக் கேட்டது ஒரு நிருபர். அந்த நிருபருக்கு ஒரே ஆச்சர்யம்.
என்னடா இது! கவலையில்லாத ஒரு மனிதனா? அல்லது கவலையைப் பற்றி நேரம் இல்லை என்று சொல்லும் ஒரு மனிதனா? என்று ஆச்சர்யம். வின்ஸ்டன் சர்ச்சில் அதற்குக் கூறிய விளக்கம், நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறேன். அதனால் எனக்குக் கவலைப்படுவதற்கு நேரம் இல்லை என்று கூறினார்.
உண்மையிலேயே நல்ல பதில் மற்றும் உண்மை கூட. கவலைகளின் மூலகாரணத்திற்கு நம்முடைய கற்பனையும் ஒரு காரணம். கவலைகளின் தொழிற்சாலையே ஒருவருடைய மனது தான். இங்கு தான் மனித இனத்திற்கு வேதனையைத் தரக் கூடிய கவலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தக் கவலைகளின் மூலப்பொருள் நினைவுகள். நினைவுகள் தான் ஒருவரின் கவலைக்கு முக்கியக் காரணம். நடந்துப் போனதை நினைத்துக் கவலை கொள்வதை விட்டு இனி நடக்கப் போவதை மட்டும் நினைவில் கொண்டு உற்சாகமாக செயல்படுங்கள்.
கவலைப்பட்டு, கவலைப்பட்டு மனம் நொந்துப் போய் விடாதீர்கள். மன வலிமையை இழந்து விடாதீர்கள். மனக்கவலைக்கு இடம் தராதீர்கள். எப்போதும் உற்சாகமாக இருங்கள். கவலைகளைத் தூக்கி வெளியே எறியுங்கள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



