விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் முறை, விநாயகரை வழிபட சிறப்புக்குரிய நேரம், விநாயகர் சிலையை எப்போது வாங்குவது என்பது குறித்த தகவல்களைப் பார்ப்போம்.
இந்துக்கள் பண்டிகை என்றால் மறக்க முடியா நாள் விநாயகர் சதுர்த்தி தான். அந்த 3 நாள்களும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வர். கிராமங்களில் பெரிய விநாயகர் சிலையை வைத்து 3 நாள்கள் பூஜை செய்து அருகில் உள்ள ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் விஜர்சனம் செய்வார்கள்.
தெருவெங்கும் கடைசி நாளில் விநாயகர் சிலை ஊர்வலம் வரும். பொதுமக்கள் தேங்காய் உடைத்து வழிபடுவர். அன்று முதல் இன்று வரை சற்றும் உற்சாகம் குறையாமல் இந்த பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கக்கூடிய தெய்வம் பிள்ளையார். பிள்ளையாய் இருக்கும்போதே ஆர் என்ற மரியாதைக்குரிய விகுதிச்சொல் பெற்று பிள்ளையார் என மரியாதையுடன் அழைக்கப்பெறும் தெய்வம் பிள்ளையார்.
கணங்களுக்கு எல்லாம் அதிபதி. அதனால் கணபதி. விக்கினங்களை எல்லாம் தீர்க்கக்கூடியவர். அதனால் தான் விக்னேஷ்வர். தனக்கு மேல் நாயகர் இல்லாதவர். அதனால் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
ஏக தந்தனாக இருந்து ஐந்து கரங்களால் 5 தொழில்களையும் புரிந்து அற்புதமான கீர்த்தியைத் தரும் மூர்த்தி விநாயகர் தான். எங்கு பார்த்தாலும் நாம் பார்த்து வணங்கக்கூடிய கடவுள் பிள்ளையார் தான். இதை விட அவரது எளிமையைச் சொல்ல முடியாது.
தெருக்கோடி, மரத்தடி, குளத்தங்கரை, ஆற்றங்கரை என எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் தெய்வம் விநாயகர். இவருக்கு ரொம்பவும் விசேஷமான நாள் விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு நமக்கு விநாயகர் சதுர்த்தி வெள்ளிக்கிழமை அன்றே ஆரம்பிக்கிறது. 6ம் தேதி மதியம் 1.48 மணி முதல் 7 மணி முதல் பிற்பகல் 3.38 மணி வரை சதுர்த்தி திதி உள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் பிள்ளையார் வாங்கலாம். சனிக்கிழமை காலை 7 மணி முதல் 8.50 மணி வரை வாங்கலாம். அல்லது அன்று காலை 10.35 மணி முதல் மதியம் 1.20 மணி வரை வாங்கலாம்.
அல்லது மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.