புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த சூப்பர்ஹிட் படம் நேற்று இன்று நாளை. இந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகி விட்டது. பழைய படங்களில் எம்ஜிஆர் படத்திற்கு என்றுமே தனி மவுசு உண்டு. இப்போது பார்த்தாலும் ப்ரஷாக இருக்கும். பாடல்கள், காமெடி, த்ரில்லர் காட்சிகள், தத்துவங்கள், சென்டிமென்ட் என படத்தைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழ்சினிமாவில் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவர் நடித்த ‘நேற்று இன்று நாளை’ படம் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ரிலீஸானது. படமும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தைத் தயாரித்தவர் அசோகன்.
இவர் வேறு யாருமல்ல. நடிகரும் வில்லனுமான அசோகன் தான். இந்தப் படத்திலும் அவர் நடித்திருந்தார். எம்ஜிஆர், மஞ்சுளா, லதா, நம்பியார் உள்பட பலர் நடித்த இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் எம்எஸ்.விஸ்வநாதன்.
படத்தில் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் தான். இந்தப் படத்தில் நடிக்கும்போது எம்ஜிஆர் ‘இதயவீணை’ படத்திலும் நடித்து வந்தார். அந்த நேரம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தார்.
உடனே ஏற்கனவே ஒத்துக் கொண்ட படங்களில் நடித்து முடிக்க வேண்டும். அதே நேரம் தனிக்கட்சியும் தொடங்க வேண்டும் என்ற நெருக்கடியான நிலையில் எம்ஜிஆர் புத்திசாலித்தனமாக செயல்பட்டார்.
இரு வேலைகளிலும் தீவிரமாக இறங்கினார். இந்த நேரம் நேற்று இன்று நாளை படம் நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்தது. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் அசோகன் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
நிலைமையைப் புரிந்து கொண்ட எம்ஜிஆர், யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ கொடுத்து விடுங்கள் என தன்னிடமிருந்து அவருக்கு பணம் கொடுத்து உதவினார். தனக்கு சம்பளம் வேண்டாம் என்று விட்டு விட்டார். 2 வருடங்களாகத் தயாரிப்பில் இருந்தது படம். 1974ல் படம் ரிலீஸானது.
100 நாள்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் பாடும்போது நான், நான் படிச்சேன், நீ என்னென்ன, இன்னொரு வானம், நெருங்கி நெருங்கி, அங்கே வருவது ஆகிய முத்து முத்தான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.