பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?

By John A

Published:

சினிமா உலகில் எம்.ஜி.ஆர் மிகப் பெரிய ஜாம்பவானாக விளங்கியதற்கு அவரின் பாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தன. தான் நடிக்கும் படங்களில் கதை, இதர நடிகர்கள் பற்றி கண்டுகொள்ளாதவர் மிக முக்கியமாகப் பார்ப்பது பாடல்களையும், சண்டைக் காட்சிகளையும் தான். தனது படங்களில் இவை இரண்டும் எம்.ஜி.ஆரின் அனுமதி பெறாமல் பதிவு செய்யப்படாது.

எம்.ஜி.ஆர். அரசியலில் நுழைந்த பிறகு, மக்கள் மத்தியில் இவர் எளிதில் சென்று சேர உதவியவை இவரின் பாடல்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் பிறகு தாய்ப்பாசம். இவை மூன்றும் எம்.ஜி.ஆர் எந்தப் படங்கள் இருந்தாலும் அவற்றில் கண்டிப்பாக இடம்பெறும். இப்படி அஜீத் பில்லா படத்தில் சொல்வது போல அவரின் வாழ்வின் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் அவரால் செதுக்கப்பட்டது.

எம்.ஜி.ஆருக்கு பட்டுக்கோட்டையாருக்கு அடுத்தபடியாக பாடல்களில் அவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது கண்ணதாசனின் வரிகளே. எம்.ஜிஆரும், கண்ணதாசனும் திரையுலகில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தனர். இருப்பினும் இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு வருமாம்.

ஆனால் சில நாட்களுக்குத்தான் இந்தக் கருத்து வேறுபாடு நீடிக்குமாம். பின்னர் யாரேனும் ஒருவர் முதலில் பேசி விடுவார்களாம். இப்படி ஒருமுறை அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது கண்ணதாசன் தனது பாடலலால் எம்.ஜி.ஆருக்கு சமரச தூதுவிட்டிருக்கிறார்.

சிவாஜி வீட்டில் திடீரென தரையில் அமர்ந்த இயக்குநர்.. ரசிகனாக மாறி கதை சொல்லி கவர்ந்த டெக்னிக்..

1963-ல் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில் கே.சங்கர் இயக்கத்தில் வெளியான படம் தான் பணத்தோட்டம். இந்தப் படத்திற்கு எம்.எஸ்.வி-ராமமூர்த்தி ஆகியோர் இசையமைக்க, கண்ணதாசன் பாடல்களை இயற்றினார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்தான்,

பேசுவது கிளியா – இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க்கொடியா

பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா

இந்தப் பாடலில் இரண்டாவதாக சரோஜாதேவி எம்.ஜி.ஆரைப் பார்த்துப் பாடும் வரிகளில், பாடுவது கவியா என்று கண்ணதாசனையும், பாரி வள்ளல் மகனா என்று எம்.ஜி.ஆரின் கொடைத் தன்மையையும், மேலும் சேரனுக்கு உறவா என்று அவரின் பூர்வீகமான கேரளத்தையும் குறிப்பிட்டு கவியரசர் கண்ணதாசன் பாடல் இயற்றியிருப்பார்.

இந்தப் பாடலைப் படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர்., ‘சேரனுக்கு உறவா..‘ என்ற வரியைக் குறிப்பிட்டு கண்ணதாசனைப் பார்த்துப் புன்னகைத்திருக்கிறார். அதன்மூலம் இவர்களின் கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது.