நம்பியார் என்றாலே நமக்கு படு பயங்கரமான வில்லன் தான் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் கலகலப்பானவர். சிரித்த முகத்துடன் தான் எல்லோரிடமும் பேசுவார். ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லையே என்று கேட்கலாம். உங்கள் சந்தேகத்தைப் போக்க ஒரு உண்மைச்சம்பவத்தைப் பார்ப்போம்.
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் எம்ஜிஆருக்கு இரட்டை வேடம். படத்தில் வில்லன் நம்பியார். எம்ஜிஆரின் அத்தானும் அவர் தான். கடைசியில் மனம் திருந்துவார். படம் 7 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது.
சென்னையில் படத்தின் வெற்றி விழா நடந்தது. படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் பேசி முடித்ததும் எம்ஜிஆர் பேசினார். அவர் பேச்சு மக்களுக்குத் தெளிவாகக் கேட்க வேண்டும் என்பதற்காக 2 மைக்குகள் வைக்கப்பட்டன.

மேடையில் அமர்ந்து இருந்த நம்பியார் மைக் அருகே வந்தார். இது அநியாயம்… அக்கிரமம்… நாங்கள் பேசும் போது ஒரு மைக் தான் வைக்கப்பட்டது. எம்ஜிஆர் பேசுவதற்கு மட்டும் 2 மைக்குகளா? என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் வில்லத்தனம் கலந்து எழுப்பிய கேள்வியால் அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.
அதற்கு எம்ஜிஆரும் உடனடியாக பதிலடி கொடுத்தார். இது என்ன லேசா? படத்தில் எனக்குத் தான் இரட்டை வேடம். அதனால் தான் எனக்கு 2 மைக்குகள் என்று சிரித்தபடியே சொன்னார். கூட்டத்துடன் சேர்ந்து நம்பியாரும் கரகோஷம் எழுப்பினார்.
எங்க வீட்டுப்பிள்ளை படம் 1965ல் வெளியானது. எம்ஜிஆர், சரோஜாதேவி, நம்பியார், எஸ்.வி.ரங்கராவ், நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் அத்தனை பாடல்களும் பிரமாதமாக இருக்கும். எம்ஜிஆர், நம்பியார் நடிப்பு செம மாஸாக இருக்கும். இதில் இரட்டை வேடத்தை ஏற்று எம்ஜிஆர் நடிப்பில் வெளுத்துக் கட்டியிருப்பார். கோழை, வீரன் என முற்றிலும் மாறுபட்ட இரு கேரக்டர்களில் வந்து அசத்துவார்.
இந்தப் படத்தில் தான் நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் பாடல் வரும். இது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அதே போல நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் பாடலும் இன்று வரை நம்மை ரசிக்க வைக்கும் பாடல். படத்திற்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். படத்தை இயக்கியவர் சாணக்யா.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


