60-களின் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கும், 80களின் காதல் மன்னன் கமல்ஹாசனுக்கும் இடையே ஒரு அற்புதமான உறவு இருந்திருக்கிறது. களத்தூர் கண்ணம்மா படத்தில் ஆரம்பித்த இவர்களது உறவு ஜெமினியின் இறுதி நிமிடம் வரை தொடர்ந்திருக்கிறது. உன்னால் முடியும் தம்பி, அவ்வை சண்முகி என திரையிலும் இவர்களது பயணம் தொடர்ந்தது.
ஜெமினி கணேசனுடன் அவருக்குள் இருந்த உறவு பற்றி கமல் குறிப்பிடும் போது, “நான் எங்கே சென்றாலும் அதே ‘களத்தூர் கண்ணம்மா’ கமல்தான் அவருக்கு (ஜெமினி கணேசன்). எங்கே பார்த்தாலும் என்னைத் தேடி வந்து பேசுவார். எனக்குப் பேர் வைத்திருந்தார். மிகப்பெரிய படிப்பாளி. நான் செய்தது அவருக்குப் பிடிக்கவில்லை என்றால், ‘போடா… போப்பாகாட்டிக் பெட்டலிக்ஜிம்’ என்பார். இது ஏதோ கெட்டவார்த்தை போல் இருக்கிறது. திட்டுகிறார் என்று நினைத்தேன். அமெரிக்க இலக்கியத்தில், அமெரிக்க நேட்டிவ் வார்த்தைகளில் இதுவும் உண்டு என்று பின்னர்தான் தெரிந்தது.
பிறகு ‘அவ்வை சண்முகி’யில் அவருடன் நடித்தது வரை எவ்வளவு நீண்ட பயணம் எங்களுடையது? நாகேஷ் நிரந்தர இளைஞர், ஜெமினி மாமா மாதிரியே. ஜெமினி மாமா அவர்களும் நாகேஷ் அவர்களும் ‘வாடா போடா’ என்று பேசிக்கொள்வார்கள். எனக்கு ஒருமாதிரியாக இருக்கும். ‘என்ன.. இப்படியெல்லாம் திட்டிக்கொள்கிறார்கள்’ என்று! அப்படி ஸ்கூல் பாய்ஸ் மாதிரி பேசிக்கொள்வார்கள். ’நீ நடிக்கிறியா. தெரிஞ்சிருந்தா நான் வந்துருக்க மாட்டேன்’ என்று நாகேஷ் சார் கிண்டல் செய்வார். உடனே ஜெமினி மாமா, ‘நீ நடிக்கறது தெரிஞ்சிருந்தா, நான் ஒத்துக்கிட்டிருக்கவே மாட்டேன்’ என்று சொல்லுவார். இப்படி இளமை மாறாமல் இருவரும் ஜாலியாகப் பேசிக் கொள்வார்கள்.
‘உன்னால் முடியும் தம்பி’ மாதிரி பல படங்கள். மறக்கவே முடியாது. நீண்ட நேரம் நின்று நடிப்பதால் கால் வலிக்கும். அந்த வலி போவதற்கு ஒரு யோகா சொல்லித்தந்தார் எனக்கு. மிகப்பெரிய யோகா மாஸ்டர் அவர். தமிழ் இலக்கியம் தெரியும் அவருக்கு. ஆங்கிலம் பேசுவார். சம்ஸ்க்ருதம் தெரியும்.
ஜெயலலிதாவே வியந்து பாராட்டிய ‘பிச்சாதிபதி‘.. மிமிக்ரியில் மிரள வைக்கும் படவா கோபி..
ஜெமினி மாமாவால் எனக்கு நிகழ்ந்த நன்மைகள் பல உண்டு. தீமைகளும் உண்டு. ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில், ஐந்தடி ஆறடி உயரத்தில் இருந்து டூப் போடாமல் குதிரை மீது குதித்து உட்காருவார் ஜெமினி மாமா. இதைப் பார்த்துவிட்டு, ஐந்தடி உயரத்தில் இருந்து நான் சைக்கிளில் உட்காருவதற்கு குதித்து, இரண்டு மூன்று வாரங்கள் வேதனையுடன், வலியுடன் இருந்தேன்.
நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது… நகைச்சுவை. எப்போதும் சந்தோஷமாக இருப்பதை கற்றுக் கொண்டேன். அவர் குடும்பத்தார், அவரின் பிள்ளைகள் என எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவர் வீட்டுக்குச் செல்வேன். திடீரென்று, ‘வாடா, வண்டில ஏறு. அப்படியே போயிட்டு வரலாம்’ என்று சுற்றும் அளவுக்கு எங்களுக்குள் நட்பு இருந்தது. ஒரு டீன் ஏஜ் பையனுக்கு அப்படியொரு நட்பு கிடைத்தது ஆச்சரியமான ஒன்று.
மயிலாப்பூரில் ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தேன். என்னுடைய முதல் வீடு அது. ஒருநாள் காலை… வீட்டு வேலையைப் பார்க்க போய் நின்றிருந்தேன். அப்போது என் முதுகில் யாரோ கைவைத்தார்கள். திரும்பி பார்த்தால்… ஜெமினி மாமா. ’என்னடா… வீடு கட்றியாமே. வீட்டை காட்டுடா’ என்றார். விவரம் சொல்லி காட்டினேன். அது அவருக்கு எந்த அளவுக்குப் பெருமையாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். ‘என்னடா வீடு கட்றியாமே’ என்று அவர் கேட்ட போது அவருக்கு என்ன வயதோ.. அந்த வயது எனக்கு இப்போது!
கமலுக்கு காதல் இளவரசன் பட்டம் கொடுத்த ‘பட்டாம் பூச்சி‘.. காதல் இளவரசி யாருன்னு தெரியுமா?
ஜெமினி மாமா, என் வாழ்வில் கிடைத்த மாபெரும் சந்தோஷங்களில் ஒரு சந்தோஷம். வேறு எப்படியும் அவரை நினைத்துப் பார்க்கமுடியவில்லை. அவரிடம் பாராட்டு பெற்றிருக்கிறேன். திட்டு வாங்கியிருக்கிறேன். பதிலுக்கு திட்டியிருக்கிறேன். மன்னிப்பு கேட்டிருக்கிறேன். இது அற்புதமான உறவு. என் அண்ணன்களிடம் இருந்த உறவு போல் ஜெமினி மாமாவிடம் இருந்தது.“ இவ்வாறு கமல்ஹாசன் ஜெமினியுடன் தான் கொண்டிருந்த நட்பு பற்றி கட்டுரை ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மேலும் பாலச்சந்தரிடம் கமலை அறிமுகப்படுத்தி வைத்ததும் ஜெமினி கணேசனே.