தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கியவர் நடிகர் பாண்டு. வித்தியாசமான முக பாவனைகளால் காமெடிக் காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர். மேலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துப் பிரபலமானவர். ஆனால் பாண்டுவுக்கு இப்படி ஒரு திறமை இருப்பது பலரால் அறியாத விஷயம்.
நகைச்சுவை நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் தெரியுமா? சின்ன வாத்தியார் படத்தில் கவுண்டமணியுடன் காது கேளாதவராக நடித்து அசத்தியவர் தான் இவர். பாண்டுவும், இவரும் சகோதரர்கள் ஆவர்.
எம்.ஜி.ஆருக்கு பழக்கமானவராக இருந்த இடிச்சபுளி செல்வராஜ் தன் சகோதரரான பாண்டுவிற்கு, நடிக்க வாய்ப்புக் கேட்டார். பாண்டுவை எம்.ஜி,ஆர், சிரித்துவாழ வேண்டும், குமரிக்கோட்டம் உள்ளிட்ட படங்களில் சிறுவேடங்களில் நடிக்க வைத்தார். பின்னர் அவர் பிரதான நடிகராக, அறிமுகமான படம் தான் “மாணவன்”.
“குமரிக்கோட்டம்” படத்தில், ஜெயலலிதாவின் ஓவியத்தை, எம்.ஜி.ஆர் வரைவது போன்ற காட்சிவரும். உண்மையில் அந்த ஓவியத்தை வரைந்தவர் பாண்டுதான்.
இந்தப் பாட்டை எழுதியது இவரா? நடிகை ரோகிணியின் அறியாத பக்கங்கள்
சிறந்த ஓவியராகவும் விளங்கிய பாண்டுவிடம் எம்.ஜி.ஆர், அஇஅதிமுக கொடியை வடிவமைக்கும் பணியை கொடுத்தார். பாண்டு, கொடியை வரைந்து நடுவே அண்ணாவின் படத்தைப், பிரிண்ட் செய்யாமல், லைன் ட்ராயிங் படமாக வரைந்து, இரண்டே நாட்களில் எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார்.
பார்த்ததுமே, எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப் போனது. அதையே தன் கட்சிக் கொடியாக்கினார் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க கொடியில் உள்ள அண்ணா படத்திற்கு, பாண்டுவிற்கு முன்மாதிரி வடிவமாக இருந்து உதவியது, சென்னை அண்ணாசாலையிலுள்ள அண்ணாசிலை ஆகும். அச்சிலையிலுள்ள அண்ணா வடிவையே கட்சிக் கொடியிலும் பிரதிபலிக்க வைத்தார் பாண்டு.
“உலகம் சுற்றும் வாலிபன்” படம், அரசியல் கருத்து வேறுபாடுகளால், தி.மு.கவினரின் எதிர்ப்புக்கு ஆளானது. அப்பட சுவரொட்டிகளை, தி.மு.கவினர் கிழித்தெறிந்தனர்; பல பகுதிகளில் ஒட்டவும் விடவில்லை. இதையடுத்து, எம்.ஜி.ஆர், அப்படத்திற்கு, விளம்பரமாக, சுவரொட்டிகளுக்கு மாற்றாக, ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த முடிவெடுத்தார். கடைகள், வாகனங்களில் ஒட்டும்படியான அந்த ஸ்டிக்கர்களை வடிவமைத்துக் கொடுக்கும் பணியையும் பாண்டுவிடமே ஒப்படைத்தார். அப்பணியையும் சிறப்பாகச் செய்து, எம்.ஜி.ஆரின் பேரபிமானத்தைப் பெற்றார் பாண்டு.
பாடகி சொன்ன ஒரே வார்த்தைக்காக தனது பல நாள் பழக்கத்தை விட்ட சிவாஜி!… என்ன விஷயம்னு தெரியுமா?…
திரைப்படங்களில் மட்டுமின்றி, தினம் தினம் தீபாவளி, உறவுகள், சங்கமம், வள்ளி முதலான தொடர் நாடகங்களிலும் நடித்துள்ளார் பாண்டு. பல பிரலங்பள் பலரின் வீட்டுப் பெயர்ப் பலகைகளை வடிவமைத்தவரும் பாண்டுதான்.
தமிழக அரசின் சுற்றுலாத்துறை லோகோவை, சிறப்பாக வடிவமைத்ததற்காக, பாண்டுவிற்கு பெரும் பாராட்டுகளும், பரிசுகளும் கிடைத்தன. “கேபிடல் லெட்டர்ஸ்” என்ற வடிவமைப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார் பாண்டு. இந்த நிறுவனத்திற்கு அமோக வரவேற்பு, வெளிநாடுகளிலும் கிடைத்தது. எனவே, பாண்டு, தமிழ்நாட்டிலிருந்த காலங்களை விட, வெளிநாடுகளிலிருந்த காலங்களே அதிகமாகும்.