இந்தப் பாட்டை எழுதியது இவரா? நடிகை ரோகிணியின் அறியாத பக்கங்கள்

பாலுமகேந்திரா இயக்கிய மறுபடியும் படத்தில் இடம்பெற்ற ஆசை அதிகம் வச்சு பாடலைக் கேட்டு ரசிக்காத இசைப்பிரியர்களே இல்லை எனலாம். இந்தப் பாடலின் நடனத்திற்கு ஆடாத கால்களே இல்லை என்னும் அளவிற்கு பள்ளி, கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் அதிகம் இடம்பெற்ற ஹிட் பாடல் இது.

இதில் ரோகிணியின் நடனம் வெகு நேர்த்தியாக இடம்பெற்றிருக்கும். ஆனால் நிஜத்தில் ரோகிணி ஒரு பன்முகம் கொண்ட நடிகை. குறும்படங்கள், ஆவணப் படங்கள் மூலம் சமுதாயத்தில் நிகழும் அவலங்களை படம்பிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர்.

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோகிணி சிறந்த பாடலாசிரியரும் கூட. மகளிர் மட்டும், மறுபடியும் படங்களில் நடித்த போது இவருக்கும், நடிகை ரேவதிக்கும் நல்ல நட்பு ஏற்பட இந்நாள் வரை அது தொடர்கிறது.

கௌதம் வாசுதேவ் மேனின் சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இடம்பெற்ற உனக்குள் நானே பாடலை இவர்தான் இயற்றினார் என்பது பலரும் அறியாத ஆச்சர்ய விஷயம்.

வேட்டையாடு விளையாடு படத்தின் டப்பிங் பணிகளில் ரோகிணி இருக்க அதேநேரத்தில் அப்போது தொடர்பு கொண்ட ரேவதி பாடல் ஒன்றிற்காக சில வரிகளைக் கேட்க கௌதம் வாசுதேவ் மேனன் இதைக் கவனித்து தனக்கும் பாடல் இயற்றக் கேட்க உருவானதுதான் உனக்குள் நானே பாடல்.

பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா இவ்வளவு சாதனைகளுக்குச் சொந்தக்காரரா?

நடிகை ரோகிணி ரகுவரனைத் திருமணம் செய்து பின் இருவரும் விவாகரத்து பெற்றனர். தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், அரசின் பல விழிப்புணர்வு படங்களின் இயக்குநராகவும் சினிமா உலகில் வலம் வரும் ரோகிணி இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.

பெண்ணியம் சார்ந்த கருத்துக்களில் அவ்வப்போது முன்வைக்கும் நடிகை ரோகிணி சிறந்த எழுத்தாளராகவும் திகழ்வது இவரின் சிறப்பு. மணிரத்னம் இயக்கிய பம்பாய், இருவர், ராவணன் போன்ற படங்களில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மனீஷா கொய்ராலாவுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

தெலுங்கில் வெளியான ஸ்த்ரீ திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews