ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய முந்தானை முடிச்சு படம் அப்போது பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அந்தப்படத்தின் கதை அப்படிப்பட்டது. எந்த ஒரு காட்சியும் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. அந்த அளவு திரைக்கதையை மிக நேர்த்தியாக எடுத்திருப்பார் இயக்குனர் கே.பாக்யராஜ். இந்தப்படத்தின் 200வது நாள் விழாவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலந்து கொண்டு இவ்வாறு பேசினார்.
முந்தானை முடிச்சு என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்பதை விட முந்தானை என்பதைப் பற்றி பெரிய அரசியல் சர்ச்சை ஏற்படுகிற அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். பெரியவர் நாகிரெட்டி அவர்கள் இந்த முந்தானை முடிச்சு என்பது பிரம்ம முடிச்சு என்று ஆந்திரத்திலே சொல்வார்கள் என்று குறிப்பிட்டார்கள்.
பிரம்ம முடிச்சு என்றாலும் சரி. அன்பு முடிச்சு என்றாலும் சரி. பொதுவில் மக்களுக்கும் இந்த தொழிலுக்கும் இடையில் போடப்பட்ட உறுதியான முடிச்சு என்பதை நான் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
பல பிரச்சனைகள் இருக்கின்ற நேரத்தில் 72 நாள்கள் ஓடியது. முந்தானை முடிச்சு படத்தை நான் பார்த்தேன். நண்பர் சரவணனிடம் கேட்டு வீடியோ கேசட்டையும் நான் வாங்கி வைத்திருக்கிறேன். அடிக்கடி போட்டும் பார்க்கிறேன்.
அடிக்கடி ஏன் என்று கேட்கக்கூடாது. நான் அன்பே வா படத்தில் நடிக்கும்போது நண்பர் சரவணன் அவர்கள், அவர்களுடைய சகோதரர்கள் எப்படி என்னிடம் பழகினார்கள்? என நான் மென்மேலும் வியக்கின்றேன். தெனாலிராமன் கதை சொல்லும்போது, இருந்தும் கெடுத்தான். செத்தும் கெடுத்தான்னு சொல்வாங்க.
ஆனால் ஏவிஎம் அவர்கள் இருந்தும் இந்த திரை உலகை வாழ வைத்தார்கள். மறைந்தும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணும்போது அந்தப் பெருந்தகையோட வாரிசுகள் இங்கு புகழ் பெறும்போது ஆச்சரியப்படுவதற்கல்ல என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று எண்ணும்போது ஏவிஎம் போன்றவர்கள் ஒரு முத்திரையைப் பதிக்காமல் விட மாட்டார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
காரில் டெல்லி செல்லும் போது ஒரு ஊரில் உள்ள கொட்டகைக்குச் சென்றார்கள். அங்கு இந்திப்படம் ஓடுகிறது. அது ஏவிஎம்மால் தயாரிக்கப்பட்ட படம். அங்கு படம் போடும்போது அந்த எம்ளம் காட்சி அளிக்கையில் மக்கள் கைதட்டினார்கள்.
நம்மவர்கள் அந்த பெருமையை வேறு இடத்தில் பெற முடிகிறது என்றால் நாம் எல்லாம் எவ்வளவு தனி உணர்வைக் கொடுக்கிறது என்று பார்த்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஏவிஎம் இப்படிப்பட்ட படங்களைக் கொடுப்பதில் ஆச்சரியம் இல்லை.
200 நாள்கள், ஒரு வருடம் என்று ஓடக்கூடிய அளவு படங்களைத் தரும் ஏவிஎம் நிறுவனத்தாருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து சொல்கிறேன்.