சும்மா மட்டம் தட்டி பேசாதீங்க..! பெத்த புள்ளைங்கள இப்படியா பேசுறது? பாடகி சின்மயி காட்டம்

சினிமாவில் பின்னணி பாடகியாக ஏ.ஆர். ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் பின்னணி பாடகி சின்மயி. சன்டிவியில் ஒளிபரப்பான சப்தஸ்வரங்கள் பாடல் நிகழ்ச்சியில் இவரது திறமையைக் கண்ட ஏ.ஆர்.ரஹ்மான் கன்னத்தில் முத்தமிட்டால் வாய்ப்பினை வழங்கினார்.

தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோயின்களுக்கும் டப்பிங் குரலும் கொடுத்து வருகிறார். இவரது முதல் பாடலான ஒரு தெய்வம் தந்த பூவே அவருக்கு நிறைய புகழை சம்பாதித்துக் கொடுத்தது. அப்போது அவருக்கு வயது எத்தனை தெரியுமா? டீன் ஏஜ்-ஐ கூட தாண்டாத 15 தான்.

மேலும் ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான சூப்பர்  சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இவ்வாறு சின்னத்திரை, வெள்ளித் திரை இரண்டிலும் பிஸியாக இருக்கும் சின்மயி சர்ச்சைக் கருத்துக்களுக்கும் பஞ்சம் இல்லாதவர். தனது திருமணத்தின் போது கூட பரிசுப் பொருட்கள் வேண்டாம் என்றும் அதற்குப் பதிலாக மலை சாதியினரின் கல்விக்கு உதவிடுமாறும் வந்த விருந்தினர்களிடையே கேட்டுக் கொண்டார். 2014-ல் திருமணம் செய்து கொண்ட அவருக்கு கடந்த வருடம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

கவிஞர் வைரமுத்து மீது Metoo புகார் தெரிவித்ததும், தனது புகைப்படங்கள் ஆபாசமாக இணையதளங்களில்  உலாவந்தது குறித்தும், இட ஒதுக்கீடு, தமிழக மீனவர்கள் குறித்தும் இவர் கூறிய கருத்துக்கள் இவரை சமூக ஊடகங்களின் சர்ச்சை நாயகியாகவே வைத்திருந்தன. மேலும் அவர் சமூக ஊடகங்களில் பிஸியாக இருப்பதால் அவ்வப்போது இணையதளங்களில் இவர் கூறும் கருத்துக்கள் பற்றி எரியும்.

இந்நிலையில் மீண்டும் பேட்டி ஒன்றில் பெற்றோர்கள் குறித்து ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அதாவது, பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும், மாமியார் மருமகள் உறவு எப்படி இருக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்தது போல் பிள்ளைகளை அடித்து வளர்த்தால் அது தவறான முன்னுதாராணமாக ஆகிவிடும் என்றும் “அடிச்சு வளர்க்குறதுக்காக புள்ளைய பெத்துகிறீங்க“ என்றும் காரசாரமாக பேட்டி கொடுத்துள்ளார்.

இவரின் இந்தபேட்டி சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. சின்மயி உளவியல் படிப்பில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பின்னணி பாடகி, டப்பிங் என்று மட்டுமல்லாமல் Business-லும் கலக்கி வருகிறார்.