தமிழ் சினிமாவில் தனது இயல்பான வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்களில் ஒருவர் பசி சத்யா. ஆனால் அதிகம் கவனிக்கப்படாதவர் என்ற குறை அவருக்கு நீண்ட காலமாக உள்ளது.
மதுரையை பூர்வீகமாக கொண்ட பசி சத்யாவின் அம்மா சங்கீத வித்துவான். அப்பா மத்திய அரசு ஊழியர். சினிமாவுக்கும் சத்யா குடும்பத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் தற்செயலாக பவளக்கொடி என்ற நாடகத்தில் நடிக்க சத்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
கிராமத்து கேரக்டர்.. குலவை பாடல்.. ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்ற தேனி குஞ்சரம்மாள்..!
பள்ளியில் படித்துக் கொண்டே பல நாடகங்களில் நடித்த சத்யா ஒன்பதாம் வகுப்புக்கு பிறகு படிப்பதை நிறுத்திவிட்டு எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் முன்னிலையில் நாடகங்களில் நடித்தார். சுமார் 2500 மேடை நாடகங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1970களில் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் அதில் பசி சத்யா நாயகியாக பல நாடகங்களில் நடித்தார். இந்த நிலையில்தான் ‘முயலுக்கு மூன்று கால்’ என்ற படத்தில் சைக்கிள் ஓட்டும் பெண் கேரக்டரில் நடித்தார். அந்த படத்தில் அவரை விட வயதான மனோரமாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
அதேபோல் மூத்த நடிகர் சிவகுமாருக்கு பாட்டியாகவும் அண்ணாமலை சீரியலில் நடித்துள்ளார். நான் என்னுடைய கேரக்டரின் வயதை பற்றி பார்க்க மாட்டேன் நடிப்புக்கு தீனி இருக்கின்றதா என்று மட்டுமே பார்ப்பேன் என்று சத்யா இதுகுறித்து பேட்டியில் கூறியிருந்தார்.
எம்ஜிஆருக்கு இரட்டை இலை சின்னத்தை டிசைன் செய்தவர்.. ஓவியத்தில் டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் பாண்டு..!
இவர் நடித்த கவனிக்கத்தக்க திரைப்படம் என்றால் பசி மற்றும் வீடு ஆகிய படங்களை சொல்லலாம். பசி படத்தில் இவர் மிகவும் சிறப்பாக நடித்ததை அடுத்து அவரது பெயரே பசி சத்யா என்று ஆனது. இந்த படத்தில் ஷோபா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா 1980 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலையில் நடக்க இருந்த நிலையில்தான் மதியம் ஷோபா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பசி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஷோபாவுக்கு கிடைத்தும் அதை அனுபவிக்காமல் அவர் இறந்துவிட்டார் என்று சத்யா பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
சுமார் 40 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் பசி சத்யா 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனாலும் எனக்கு திருப்தி ஏற்படுத்தும் கேரக்டர் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். எப்போதுமே என்னுடைய கவலையை நான் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்றும் கிடைத்த வேடத்தில் நடித்து கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
பசி சத்யாவின் கணவர் மத்திய அரசின் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. இருவருமே படிப்பில் மிகவும் கெட்டிக்காரர்களாக இருந்து கோல்ட் மெடல் வாங்கி உள்ளார்கள்.
‘நேற்று இன்று நாளை’ என்ற எம்ஜிஆர் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு எம்.ஜி.ஆரின் உழைக்கும் கரங்கள் படத்திலும் நடித்தார். பசி என்ற படத்தில் செல்லம்மா என்ற கேரக்டரில் அசத்தலாக நடித்த சத்யா அதன்பின் முந்தானை முடிச்சு, தூங்காதே தம்பி தூங்காதே, வீட்டுக்கு ஒரு கண்ணகி, நான் பாடும் பாடல், படிக்காத பண்ணையார், எங்க ஊரு பாட்டுக்காரன், வீடு, மறுபக்கம், மே மாதம், திருமூர்த்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
முதல் படமே காணாமல் போனது.. குணச்சித்திர நடிகர் கே.கே.சௌந்தர் கடந்த பாதை..!
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘ஆன்ட்டி இந்தியன்’ என்ற படத்தில் கூட பசி சத்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.