எழுபதுகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் தான் எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த நிலையில் சிவாஜிக்கு முதல் முதலாக இசைஞானி இளையராஜா இசையமைத்த படம் ‘தீபம்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற அந்தப்புரத்தில் ஒரு மகாராணி, பூவிழி வாசலில், பேசாதே, ராஜா யுவராஜா ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து சிவாஜியின் படங்களுக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
சிவாஜி – இளையராஜா இணைந்த முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படம் பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இதன் பிறகுதான் இளையராஜா மீது சிவாஜிக்கு ஒரு நன்மதிப்பு வந்ததாகவும் சிவாஜி புரடொக்சன்ஸ் தயாரித்த பல படங்களுக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு அவர் வாய்ப்பு கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல.. 17 முறை ஒரே நாளில் வெளியான சிவாஜியின் இரண்டு படங்கள்.. பெரும் சாதனை..!
சிவாஜி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் படத்திற்கு பாடல்கள் கம்போஸ் செய்ய வேண்டும் என்றால் உடனே ட்யூன்கள் கொட்டிக் கொண்டு வரும் என்று ஒரு பேட்டியில் இளையராஜா கூறியுள்ளார். அந்த அளவுக்கு சிவாஜிக்கும் இளையராஜாவுக்கும் இடையே ஒரு நட்பு ஏற்பட்டது.

சிவாஜி நடிப்பில் இளையராஜா இசையில் உருவான முதல் படமான ‘தீபம்’ படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். சிவாஜி மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் அண்ணன், தம்பியாக இருப்பார்கள். ஆனால் சிறு வயதிலேயே சிவாஜி வீட்டை விட்டு ஓடி விடுவார். ரயிலில் அவரை ஒரு பணக்காரர் சந்தித்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வளர்ப்பார். அந்த பணக்காரரின் மகளை சிவாஜி தனது தங்கை போலவே பார்ப்பார்.
தனது வளர்ப்பு தந்தை இறந்தவுடன் பெரிய தொழிலதிபர் ஆகிவிடுவார் சிவாஜி. அப்போது தன்னிடம் வேலை செய்யும் ஒருவரின் மகள் சுஜாதாவை காதலிப்பார். ஆனால் சுஜாதா ‘நீங்கள் ஒரு கெட்டவர், பல பெண்களுடன் பழகுபவர், உங்களை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என்று கூறிவிடுவார். இதனால் சிவாஜி அதிர்ச்சி அடைவார்.
ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!
இந்த நேரத்தில் தான் சிவாஜியிடம் விஜயகுமார் வேலைக்கு சேர்வார். விஜயகுமாருக்கும் சுஜாதாவுக்கும் இடையே முதலில் நட்பு உண்டாகி அதன் பிறகு காதல் ஏற்படும். தான் காதலித்த பெண்ணை தன்னிடம் வேலை பார்க்கும் விஜயகுமார் காதலிப்பதால் ஆத்திரம் அடைந்த சிவாஜி அவரை அடிப்பதற்காக வருவார். அப்போதுதான் சிறுவயதில் பிரிந்த தனது தம்பி தான் விஜயகுமார் என்பதை அவர் புரிந்து கொள்வார்.

இதனை அடுத்து அவரே இருவருக்கும் திருமணம் செய்து பார்ப்பார். ஆனால் திருமணத்திற்கு பின் நிலைமை தலைகீழாக மாறும். தன்னுடைய மனைவி ஏற்கனவே சிவாஜியை காதலித்திருப்பாரோ என்ற சந்தேகம் விஜயகுமாருக்கு ஏற்பட, அதனால் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார். ஒரு கட்டத்தில் சிவாஜி தங்களுக்காக தியாகம் செய்திருக்கிறார் என்பதை விஜயகுமார், சுஜாதா ஆகிய இருவரும் உணர்ந்து சிவாஜி கணேசனிடம் மன்னிப்பு கேட்க வரும்போது ஒரு சோகமான முடிவு ஏற்பட்டிருக்கும். இதுதான் ‘தீபம்’ படத்தின் கதை.
அன்பு நடமாடும் கலைக்கூடமே… சிவாஜியின் அற்புதமான நடிப்பில் உருவான அவன்தான் மனிதன்!
இந்த படத்தை கே.விஜயன் என்பவர் இயக்கியிருந்தார். சிவாஜியை வைத்து பல திரைப்படங்களை பிரமாண்டமாக தயாரித்த நடிகர் கே.பாலாஜி இந்தப் படத்தை தயாரித்திருந்தார். கடந்த 1977ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்றது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
