’ஜெயிலர்’ கதையில் 50 வருடங்களுக்கு முன்பே நடித்த சிவாஜி கணேசன்.. என்ன படம் தெரியுமா?

By Bala Siva

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதை என்னவென்று பார்த்தால் குடும்பத்தின் நலனுக்காக தவறான வழியில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்யும் மகனை திருத்துவதற்கு காவல்துறை அதிகாரியான தந்தை முயற்சி செய்வார், ஒரு கட்டத்தில் சரண்டர் ஆகிவிடு என்று வற்புறுத்துவார், ஆனால் மகன் முடியாது என்று கூறவே வேறு வழியில்லாமல் சட்டத்தை காப்பாற்றுவதற்காக மகனையே சுட்டுக் கொன்று விடுவார். இதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதை.

யார் இந்த ‘ஜெயிலர்’ விநாயகன்? இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா? ரஜினி சொன்ன அந்த பிரபலம் யார் தெரியுமா?

இந்த படத்தின் கதையைத்தான் 50 ஆண்டுகளுக்கு முன்பே தங்கப்பதக்கம் என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்து உள்ளார். தனது மகன் தவறான வழியில் மூலம் பணம் சம்பாதிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் சிவாஜி கணேசன் அவரை திருத்துவதற்காக பல முயற்சிகள் செய்வார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் திருந்த வாய்ப்பே இல்லை என்ற நிலையில்தான் வேறு வழியில்லாமல் அவரை சுட்டுக் கொள்வார். தங்கப்பதக்கம் படத்தின் இந்த கதைதான் ஜெயிலர் படமாக வேறு வடிவில் உருவாகியுள்ளது.

thangapathakkam

கடந்த 1974ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி தங்கப்பதக்கம் ரிலீஸ் ஆனது. ஒரு காவல்துறை அதிகாரி எப்படி தனது கடமையை சரியாக செய்வார் என்பதை மையப்படுத்தி மகேந்திரன் இந்த கதையை எழுதிய நிலையில் இந்த படத்தை மாதவன் இயக்கியிருந்தார்.

இந்த கதை ‘இரண்டில் ஒன்று’ என்ற தலைப்பில் நாடகமாக அரங்கேறி சென்னையில் பெரும் வரவேற்பு பெற்றது. நடிகர் செந்தாமரைதான் இந்த நாடகத்தை நடத்தினார். ஒருநாள் இந்த நாடகத்தை பார்க்க சிவாஜி கணேசன் வந்தபோது இது தனக்கேற்ற கதாபாத்திரம் என்பதை உணர்ந்து அந்த நாடகத்தை தன்னுடைய நடிப்பில் அரங்கேற்ற விரும்பினார்.

செந்தாமரையிடம் தனது விருப்பத்தை தெரிவித்த சிவாஜி கணேசன் அந்த கதையின் உரிமையை வாங்கினார். அதன் பிறகு தங்கப்பதக்கம் என்ற பெயரில் தன்னுடைய இமேஜுக்கு தகுந்த மாதிரி காவல்துறை அதிகாரியின் கேரக்டரை சிறிது மாற்றி நாடகமாக்கினார்.

thangapathakkam1 1

தங்கப்பதக்கம் நாடகம் சென்னையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அனைத்து சபாக்களும் இந்த நாடகத்தை அரங்கேற்ற போட்டி போட்டன. அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், திரையுலகினர், நீதிபதிகள் என பலரும் இந்த நாடகத்தில் சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போனார்கள்.

நாடகம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற பிறகுதான் சிவாஜி பிராடக்ஷன் நிறுவனம் இதை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தது. இந்த படத்தை மாதவன் இயக்கினார். 1974ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சிவாஜி கணேசனின் பல நாடகங்கள் திரைப்படமாக உருவாகியிருந்தாலும் தங்கப்பதக்கம் போல் மிகப் பெரிய வசூலை அள்ளிய படம் வேறு இல்லை என்று தான் கூற வேண்டும்.

காவல்துறைக்கு அங்கீகாரம் கொடுத்த படமாக இந்த படம் இருந்ததால் காவல்துறை சார்பில் நடைபெற்ற விழாக்களில் கூட தங்கப்பதக்கம் திரைப்படம் திரையிடப்பட்டது.

thangapathakkam3

இந்த படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பை பல இடங்களில் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு முறை உயர் அதிகாரியிடம் சிவாஜிகணேசன் பேசிக்கொண்டிருக்கும்போது தொலைபேசி வரும். அப்போது அந்த அதிகாரி, ‘உங்கள் மனைவி இறந்துவிட்டார்கள்’ என்று சொல்ல மனதளவில் இடிந்து விடுவார் சிவாஜி. ஆனாலும் அவர் தனது மேலதிகாரி முன் தனது வருத்தத்தை காண்பித்துக் கொள்ளாமல் நான் போகலாமா சார் என்று கேட்டு சல்யூட் அடித்து விட்டு செல்வார் இந்த காட்சியில் சிவாஜி கணேசன் மிக அபாரமாக நடித்திருப்பார்.

ரஜினி படத்தில் இருந்து திடீரென விலகிய சிவாஜி கணேசன்.. பல பிரபலங்கள் இருந்தும் தோல்வியான ‘மாவீரன்’..!

தன்னுடைய மகன் தவறான வழியில் சம்பாதிக்கிறார் என்பதை அறிந்துகொண்டு அவனுடைய வாயிலேயே அதை வரவழைக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாடகம். அந்த நாடகத்தின் முடிவில்தான் சிவாஜி கணேசனின் மகன் ஸ்ரீகாந்த் தவறான வழியில் சம்பாதிப்பது உறுதி செய்யப்படும்.

கிளைமாக்ஸ் காட்சியில் போலீசிடம் இருந்து தப்பித்து ஓட முயற்சிக்கும் மகனை சரண்டராகி விடும்படி சிவாஜி கெஞ்சுவார். அதன் பிறகு வேறு வழியில்லாமல் நீதியை காக்க மகனையே சுட்டுக் கொள்வார். சுட்டுக்கொன்ற பின் மகனின் பிணத்தை மடியில் வைத்துக்கொண்டு ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்று அவர் பாடும் போது வெளிப்படும் நடிப்பை பாராட்டுவதற்கு சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

thangapathakkam2 1

சிவாஜி கணேசன் ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இணையாக கே.ஆர்.விஜயாவும் நடித்திருந்தார். சிவாஜி கணேசன் மகனாக ஸ்ரீகாந்த், மருமகளாக பிரமிளா நடித்திருந்தனர். மேலும் சில முக்கிய கேரக்டர்களில் வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தரராஜன், சோ, ஆர்.எஸ்.மனோகர், சுருளிராஜன், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற நான்கு பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக, ‘சோதனை மேல் சோதனை’, ‘நல்லதோர் குடும்பம்’, ‘சுமைதாங்கி சாய்ந்தால்’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

தங்கப்பதக்கம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து தெலுங்கிலும் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சிவாஜிகணேசன் நடிப்பில் எத்தனையோ அபாரமான படங்கள் வெளியானாலும் அதில் முதல் இடத்தை பெறுவது தங்கப்பதக்கம் தான் என்றால் அது மிகையாகாது.