பெரும்பாலான திரைப்படங்கள் ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்றிதழ் பெற்று வருகின்றன என்பதும் மிகவும் அரிதாகவே ‘ஏ’ சான்றிதழ் சில படங்கள் பெற்று வருகின்றன என்பதும் தெரிந்தது. ஆனால் கடந்த 45 வருடங்களுக்கு முன்பே கமல்ஹாசனின் திரைப்படம் ஒன்று ‘ஏ’ சான்றிதழ் பெற்று வெளியானது. அந்த படம் தான் ‘மோகம் 30 வருஷம்’.
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் இயக்குனர் மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். இரண்டு ஜாம்பவான்கள் ஒரே படத்தில் பணிபுரிந்த படம்தான் ‘மோகம் 30 வருஷம்’.
கமல் வீட்டு மொட்டை மாடியில் தயாரான கதை.. உதவி இயக்குனராகவும் கமல்.. ஆனால் மோசமான விமர்சனங்கள்..!
இந்த படத்தின் கதைப்படி வெளிநாட்டில் படித்த கமல் சொந்த நாட்டுக்கு திரும்பி வந்த பிறகு அவருக்கு சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்பதற்காக கிராமத்து பெண் சுமித்ராவை திருமணம் செய்து வைப்பார்கள். கணவன் மனைவி உறவு என்றால் என்னவென்று தெரியாத சுமித்ராவை ஆசையாக கமல்ஹாசன் நெருங்கும்போதெல்லாம் எனக்கு தூக்கம் வருகிறது என்று சுமித்ரா சொல்லி வெள்ளேந்தியாக தூங்கிவிடும் கேரக்டரில் நடித்திருந்தார்.
அதேபோல் இன்னொரு ஜோடி விஜயகுமார் – படாபட் ஜெயலட்சுமி. விஜயகுமார் ஒரு ஓவியராக இருப்பார், ஆனால் விஜயகுமாரை படாபட் ஜெயலட்சுமிக்கு பிடிக்காது. அவர் விஜயகுமாருடன் நெருங்க விரும்ப மாட்டார்.
இன்னொரு பக்கம் ஸ்ரீபிரியா, கமல் மீது ஆசை கொண்டவராக இருப்பார். ‘என்னை கண்டிப்பாக நீ திருமணம் செய்து கொள்ள மாட்டாய், ஆனால் எனக்கு ஒரே ஒரு குழந்தை மட்டும் கொடு, உன் நினைவிலேயே நான் வாழ்ந்து விடுகிறேன்’ என்று கூறுவார்.
இப்படி போய்க்கொண்டு இருக்கும்போது தான் கமல்ஹாசனுக்கும் படாபட் ஜெயலட்சுமிக்கும் ஒரு ஈர்ப்பு உண்டாகும். அப்போது இருவரும் தவறு செய்ய முயற்சி செய்யும் போது திடீரென சுதாரித்து இது தவறு, கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவரவர் பாதையில் சென்று விடுவார்கள்.
அதே போல் இன்னொரு ஜோடியாக சுகுமாரி மற்றும் மேஜர் சுந்தரராஜன் இருப்பார்கள். ஒரு கணவன் மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும், தாம்பத்திய வாழ்க்கையில் எப்படி இனிமையாக இருக்க வேண்டும், கணவன் மனைவி இல்லறம் என்பது அசிங்கம் அல்ல அது ஒரு பேரின்பம் என்ற என்பதற்கான உதாரணத்துடன் வாழ்ந்து வருவார்கள். இந்த ஜோடியை பார்த்து தான் மற்ற ஜோடிகள் திருந்துவார்கள் என்பது போல் கதை அமைந்திருக்கும்.
கமல்ஹாசன், விஜயகுமார், மேஜர் சுந்தரராஜன், சுமித்ரா, சுகுமாரி, ஸ்ரீபிரியா, மனோரமா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு விஜயபாஸ்கர் என்பவர் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘எனது வாழ்க்கை பாதையில்’, ‘சங்கீதம் ராகங்கள்’, ‘இருபது வயதெனும்’, ‘மோகம் 30 வருஷம்’ ஆகிய பாடல்கள் அந்த காலத்திலேயே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்றாலும் வசூலில் திருப்திகரமாக இருந்தது. இது ஒரு வெற்றி படமாக தயாரிப்பாளருக்கு இருந்தது. ஊடகங்கள் இந்த படத்தை பாராட்டின. ஒரு சிக்கலான கதை அம்சத்தை மிகவும் திறமையாக இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கையாண்டு இருந்தார். கொஞ்சம் தவறினாலும் இது ஒரு அடல்ட் படமாக மாறி இருக்கும், ஆனால் அதை செய்யாமல் கணவன் மனைவிக்கு உள்ள புனிதமான உறவை மிகவும் நாகரிகமாக எடுத்து கூறிய படம் என்று ஊடகங்கள் பாராட்டின.
ரஜினி – கமல் இணைந்து நடித்த கடைசி படம்.. நினைத்தாலே இனிக்கும் ஒரு இசைக்கவிதை!
மொத்தத்தில் கமல்ஹாசனின் ‘ஏ’ சர்டிபிகெட் வாங்கிய படமாக இருந்தாலும் அனைவரும் பார்க்கக்கூடிய படமாக மாறியதுதான் இந்த படத்தின் வெற்றியாக கருதப்பட்டது.