சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த 1986ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ‘மாவீரன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி தோல்வி படமாக அமைந்தது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் சிவாஜி கணேசன் சில படங்களில் நடித்துள்ளார். ‘நான் வாழ வைப்பேன்’, ‘படிக்காதவன்’, ‘விடுதலை’, ‘படையப்பா’ ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில் அவர் ‘மாவீரன்’ என்ற ரஜினிகாந்த் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதன் பின் திடீரென விலகினார்.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த ‘படிக்காதவன்’ திரைப்படத்தை வெற்றிகரமான இயக்கிய இயக்குனர் ராஜசேகர் என்பவரிடம் ‘மாவீரன்’ படத்தை ரஜினிகாந்த் ஒப்படைத்ததாகவும், இந்த படத்தை வெற்றிப்படமாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறியதாகவும் இயக்குனர் ராஜசேகர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். என்னை நம்பி ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படத்தை ரஜினிகாந்த் ஒப்படைத்ததால் அந்த படத்தை எப்படியும் வெற்றி படமாக்க வேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்தது என்றும் கூறியிருந்தார். ஆனால் நடந்ததோ வேறு.
‘மாவீரன்’ திரைப்படம் ஹிந்தியில் அமிதாபச்சன் நடித்த ‘மர்த்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மர்த்’ திரைப்படத்தில் தாரா சிங் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அந்த கேரக்டரில் தான் தமிழில் சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் சிவாஜி கணேசன் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததாலும், ‘மர்த்’ திரைப்படத்தில் அந்த கேரக்டர் மிகவும் குறைவாக இருப்பதாக சிவாஜி எண்ணியதாகவும், அதன் பின்னர் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாகவும் கூறப்பட்டது.
முன்னதாக இந்த படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிப்பதாக விளம்பரமும் பத்திரிகைகள் வெளியானது. இதனை அடுத்து தான் ஹிந்தியில் நடித்த தாரா சிங் தமிழிலும் அதே கேரக்டரில் நடித்தார்.
இந்த படத்தின் கதை என்று பார்த்தால் அரண்மனையில் உள்ள ஆடம்பரவாசிகளுக்கும் அந்த அரண்மனைக்கு எதிரே உள்ள குடிசைவாசிகளுக்கும் ஏற்படும் பிரச்சனைதான். குடிசைவாசிகளுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் களம் இறங்கி அரண்மனைவாசிகளுக்கு எதிராக போராடுவார்.
ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!
ரஜினிகாந்த், அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா, விஜயகுமார், ஆனந்த் பாபு, தாராசிங், நாகேஷ், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் திரைக்கதை சரியாக அமையாததாலும், நம்பும்படியான காட்சிகள் இல்லாததால் இந்த படத்தை ரஜினி ரசிகர்களே கேலி செய்யும் அளவுக்கு ஏற்பட்டது.
குறிப்பாக படத்தின் ஆரம்ப காட்சியில் தாராசிங் ஓடும் விமானத்தை ஒரு கயிறால் கட்டி நிறுத்துவார் என்பதெல்லாம் மிக மோசமாக கேலி செய்யப்பட்டது. இதே காட்சி ஹிந்தியில் இருந்தபோது அதனை வட இந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இந்த படம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது என்று கூறப்பட்டது.
இந்த படத்தின் ஒரே ஆறுதல் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தான். ‘ஏ மைனா மைனா’, ‘அம்மா அம்மா’, ‘சொக்கு பொடி’, ‘எழுகவே’, ‘நீ கொடுத்ததை திருப்பி கொடுப்பேன்’ ஆகிய அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மிகவும் ஆச்சரியமாக கலக்கலான டான்ஸ் ஆடி இருப்பார்.
சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?
இந்த படம் 1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தீபாவளியன்று வெளியானது. இதே நாளில்தான் கமல்ஹாசன் நடித்த ‘புன்னகை மன்னன்’, பிரபு நடித்த ‘அறுவடை நாள்’, கலைஞரின் கதை, வசனத்தில் உருவான ‘பாலைவன ரோஜாக்கள்’ ஆகிய படங்கள் வெளியானது. ‘மாவீரன்’ தவிர மற்ற மூன்று படங்களும் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.