தமிழ் சினிமா பல ஆண்டுகளாக நாடகத்தனமாக இருந்து வந்த நிலையில், முதன்முதலாக ஒரு சினிமாவை இயல்பாக எப்படி எடுக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்றால் அது மிகையில்லை.
பாரதிராஜா தான் இயக்கிய முதல் படமான 16 வயதினிலே என்ற படத்தில் தமிழ் சினிமா இனிமேல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுத்தார்.
ரஜினி – சரிதாவின் ‘தப்பு தாளங்கள்’: சமூகத்தை சாட்டையால் அடித்து பாலசந்தர் சொன்ன கதை..!
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் பெரும்பாலும் உரையாடல்கள் தான் படமாக இருக்கும், கதையும் அவ்வாறுதான் நகரும். ஆனால் வசனம் மட்டுமல்ல, ஒரு திரைப்படத்திற்கு காட்சியும் முக்கியம் என்பதை உணர்த்திய படம் தான் 16 வயதினிலே.
அது மட்டும் இன்றி அந்த கால படங்களுக்கு பெரும்பாலும் வெளிப்புற படப்பிடிப்பு இருக்காது, செட் போட்டு அல்லது ஒரு வீட்டுக்குள்ளே படத்தை முடித்து விடுவார்கள். முதல் முதலாக ஒரு படத்தை முற்றிலும் வெளிப்புற படப்பிடிப்பாக எடுக்க வேண்டும் என்று கேமராவை தூக்கிக்கொண்டு வெளியே சென்ற படம் தான் 16 வயதினிலே.
மேலும் ஒவ்வொரு கேரக்டரும் இயல்பாக இருக்க வேண்டும் என்றும் ஒரு கிராமத்து படம் என்றால் கிராமத்தில் போய் எடுப்பதுதான் சரியாக இருக்க வேண்டும் என்றும் விதியை வகுத்து கொடுத்தவர் பாரதிராஜா.
16 வயதினிலே திரைப்படத்தில் மூன்று கேரக்டர்கள்தான் முக்கியமானது. கமலஹாசனின் சப்பாணி, ஸ்ரீதேவியின் மயிலு மற்றும் ரஜினிகாந்தின் பரட்டை. இதனை அடுத்து மருத்துவர் மற்றும் குருவம்மா கேரக்டர்கள் படத்திற்கு உதவியாக இருக்கும் மற்ற கேரக்டர்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடித்த மனோரமா மகன்.. என்ன படம் தெரியுமா?
பத்தாம் வகுப்பு பாஸ் செய்து விட்டேன் என்று மகிழ்ச்சியுடன் கூறும் மயில், டீச்சராக வேண்டும் என்று கனவில் இருப்பார். அப்போது அவர் பெரிய பெண்ணாக ஆகும் போது அவரை பார்த்த எல்லோரும் ‘மயிலோட அழகுக்கு பட்டணத்தில் இருந்து கோட்டு சூட்டு போட்ட ஒருவர்தான் மாப்பிள்ளையாக வருவார்’ என்று ஆசையை வளர்த்து விடுகின்றனர்.
இந்த நிலையில் குருவம்மா வீட்டில் அனாதையாக வளரும் சப்பாணியை, மருமகனே என்று அன்புடன் அழைப்பதால் மயிலு தனக்குத்தான் என எண்ணி ஒருதலையாக காதலிப்பார்.
இந்த நிலையில் தான் அந்த ஊருக்கு டாக்டர் ஒருவர் வருவதை அடுத்து அவரிடம் மயிலு தனது மனதை பறி கொடுப்பார். ஒரு கட்டத்தில் மயிலுவின் 16 வயதை விரும்பும் டாக்டர், அதன்பிறகு மயிலுவை ஏமாற்றிவிட்டு ஊருக்கு சென்று விடுவார். இதனை அடுத்து ஊரில் உள்ளவர்கள் கண் காது வைத்து மயிலு டாக்டரிடம் கெட்டுப் போய்விட்டார் என்று கூறுவார்கள்.
இந்த நிலையில் மனம் வருந்தும் குருவம்மா இறந்துவிட மயிலுவை காப்பாற்றும் பொறுப்பு சப்பாணிக்கு வந்துவிடும் . இந்த நிலையில் ஒரு கட்டத்தில் சப்பாணியை விரும்பி அவரையே திருமணம் செய்து கொள்வதற்காக பட்டணத்திற்கு போய் தாலி வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று கூறுவார்.
அப்போது தான் மயிலுவால் அவமானப்பட்ட பரட்டை, மயிலை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்க, பரட்டையை கொன்று விட்டு சிறைக்குச் செல்வார் சப்பாணி. சப்பாணி மீண்டும் சிறையில் இருந்து வந்து தனக்கு வாழ்வு அளிப்பார் என்று ஏக்கத்துடன் தினமும் ரயில் நிலையத்தில் வந்து காத்திருக்கும் மயிலுவின் காட்சியுடன் படம் முடியும்.
முதல் முதலாக மிகவும் இயல்பான வசனங்களுடன் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது என்றால் அது மிகையாகாது. அதேபோல் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியது. குறிப்பாக செந்தூரப் பூவே என்ற எஸ் ஜானகி பாடிய பாடல் தேசிய விருது பெற்று தந்தது. ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’, ‘சோளம் விதைக்கையிலே’, ‘மஞ்ச குளிச்சு’, ‘செவ்வந்திப் பூ எடுத்த’ ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.
அதேபோல் இந்த படத்தில் வரும் வசனங்களும் மிகவும் இயல்பாக இருக்கும். ‘இது எப்படி இருக்கு’ என்ற வசனம் அந்த காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. ‘சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசு கொடு’, ‘பத்த வச்சுட்டியே பரட்டை’, ‘தொட்டவன் விட்டுட்டு போயிட்டான் பெத்தவளும் விட்டுட்டு போயிட்டா பொறக்க போற குழந்தைக்கு அப்பா யாருன்னு சொல்லணுமே’, ‘அடிச்சா ஏன்னு கேட்க ஆள் இல்லாத அனாதை பயலே உனக்கு இவ்வளவு திமிரா?’, ‘ஆத்தா ஆடு வளர்த்த கோழி வளர்த்தா நாய் வளர்க்கல, இந்த சப்பாணியை தான் வளர்த்த மயிலு’ போன்ற வசனங்கள் மிகவும் இயல்பாக மனதை தொடும் வகையில் இருக்கும்.
மொத்தத்தில் 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டையே மாற்றிய ஒரு திரைப்படம். இந்த படம் வெளியாகி 46 ஆண்டுகளாகிய போதிலும் இன்னும் இந்த படம் குறித்து சினிமா ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதுதான் பாரதிராஜாவின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.