ரஜினி – சரிதாவின் ‘தப்பு தாளங்கள்’: சமூகத்தை சாட்டையால் அடித்து பாலசந்தர் சொன்ன கதை..!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1978ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில்  உருவான திரைப்படம்  ‘தப்பு தாளங்கள்’. இந்த படம் தீபாவளி அன்று வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம்தான் சரிதா திரையுலகில் அறிமுகமானார்.

தப்பு தாளங்கள் இசையில் இருந்தால் பெரிய பாதிப்பு வராது, ஆனால் வாழ்க்கையில் இருந்தால் என்னென்ன பாதிப்பு வரும்? மன வலிகள் வரும், வேதனைகள் வரும், அவமானங்கள் வரும் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் தனது முத்திரையுடன் பதித்து இருப்பார் கே பாலசந்தர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடித்த மனோரமா மகன்.. என்ன படம் தெரியுமா?

Thappu Thalangal3

இந்த படத்தில் மொத்தம் நான்கு முக்கிய கேரக்டர்கள் தான். ஒன்று விபச்சார புரோக்கர். இரண்டாவது விலைமகள் சரிதா. மூன்றாவது பெண்களை மோக பொருளாக பார்க்கும் சோமன். நான்காவது காசு கொடுத்தால் எதையும் செய்யும் ரவுடி ரஜினி. இந்த நான்கு கேரக்டர்களை வைத்து சமூகத்தை சாட்டையால் சுழற்றி இருப்பார் கே.பாலச்சந்தர்.

ஒரு கட்டத்தில் ரவுடித்தனம் செய்துவிட்டு போலீஸிடம் இருந்து தப்பிக்க சரிதாவின் வீட்டிற்குள் நுழைவார் ரஜினி. அப்போதுதான் சரிதா ஒரு விலைமகள் என்பது அவருக்கு தெரியவரும்.  இந்த நிலையில் இருவருக்கும் முதலில் நட்பாகி பின்னர் மெல்லிய காதல் தோன்றும்.

ஒரு கட்டத்தில் ரஜினி , ‘நான் ரவுடி தொழிலை விட்டு விடுகிறேன், நீ விபச்சார தொழிலை விட்டு விடு, இருவரும் இணைந்து உழைத்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வோம்’ என்று சொல்ல, இருவருமே திருந்தி நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால் தவறு செய்பவர்கள் திருந்தி நல்லவர்களாக வாழ்வதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாது. இந்த சமூகம் அவர்களை மீண்டும் பழைய சாக்கடைக்கு கொண்டு செல்லும் என்பதை உணர்த்தும் வகையில் திரைக்கதை எழுதி இருப்பார் கே.பாலச்சந்தர்.

இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு வசனங்களும் கன்னத்தில் அறையும் வகையில் சிறப்பாக இருக்கும். ‘பணம் மட்டும் இருந்துச்சுன்னா தப்பே பண்ணாமல் வாழலாம்’ என்று சரிதா சொல்ல, அதற்கு ரஜினி தான் சந்தித்த ஒரு நிகழ்வை சொல்லி சிரிப்பார். பணக்காரர்களும் மோசம் தான் என்பதை உணர்த்துவார்.

அரங்கேற்றம்: ஆச்சாரியமான குடும்பத்தில் பிறந்து வழிதவறிய கேரக்டர்.. கத்தியின்றி செய்த பாலசந்தரின் யுத்தம்..!

Thappu Thalangal2

அதேபோல் சரிதாவும் ஒரு நிகழ்ச்சியை சொல்லுவார். அவரிடம் வரும் கஸ்டமர் ஒருவர் வெளியே செல்லும் போது எதிரே இன்னொரு கஸ்டமர் வருவார். அப்போதுதான் இருவரும் அப்பா மகன் என்பது தெரியும். இருவரும் அடித்துக் கொள்வார்கள், ஆனால் எதற்கு என்றால் அப்பாவைவிட மகன் என்னிடம் ஐந்து ரூபாய் அதிகம் கொடுத்து விட்டதற்காக என்று சொல்லி சிரிப்பார். இப்படி சமூகத்தின் அவலங்களை நகைச்சுவையுடன் இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் கூறி இருப்பார் கே.பாலசந்தர்.

இந்த நிலையில் ஊரில் உள்ள விலைமகளுக்கு எல்லாம் கஸ்டமரை பிடித்துக்கொடுக்கும் புரோக்கர் ஒரு கட்டத்தில் தனது மகளே இன்னொரு புரோக்கர் மூலம் விலைமகளாகி இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைவார். அதன் பின்னர் அந்த புரோக்கர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் உருக்கமான காட்சியும் படத்தில் உண்டு.

விலைமகளாக இருக்கும் போது தனக்கு வரும் வருமானத்தில் பிச்சைக்காரர்களுக்கு தானம் செய்வார் சரிதா. அப்போதெல்லாம் பிச்சைக்காரர்கள் அவரை மகாலட்சுமி என்று வாழ்த்துவார்கள். ஆனால் திருந்தி வாழும் போது அவரிடம் பணம் இருக்காது அவர் பிச்சைக்காரருக்கு பணம் போடாமல் செல்லும் போது அவரை விலைமகள் என்று பிச்சைக்காரர்கள் திட்டுவார்கள். இந்த காட்சியின் போது திரையரங்குகளில் கைத்தட்டல்  விண்ணை பிளந்தது.

முதல் படத்திலேயே விலைமகள் என்ற கேரக்டரில் நடித்த சரிதாவை நிச்சயம் பாராட்டத்தான் செய்ய வேண்டும். கேரக்டருக்காக அவர் கிளாமராக நடித்திருப்பார். அதேபோல் ரவுடியாக வரும் ரஜினிகாந்த், பெண்களை போக பொருளாக பார்க்கும் சோமன் உள்பட அனைவரது நடிப்பும் மிகச் சிறப்பாக இருக்கும்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் கேட்கும் வகையில் இருக்கும் என்பது தான் மிகச் சிறப்பு. ‘தப்புத்தாளங்கள், வழி தவறிய பாதங்கள்’, ‘என்னடா பொல்லாத வாழ்க்கை’, ‘அழகான இளமங்கை’ ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!

இந்த படம் வெளியாகி 45 ஆண்டுகள் ஆகிய பின்னரும் இப்போது பார்த்தாலும் சமூகத்தின் அவலம் நம் கண்முன்னே தெரியும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் என்பது புரியும். இப்படி ஒரு படத்தை பாலச்சந்தர் தான் மீண்டும் பிறந்து வந்து எடுக்க முடியும் என்பதே படம் பார்த்து முடிந்தவுடன் அனைவர் மனதிலும் எழும் எண்ணமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...