தமிழ் சினிமாவில் அம்மா – மகன், அப்பா – மகள், அண்ணன் – தங்கை போன்ற சென்டிமென்ட் படங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு புரட்சி படத்தை எடுத்தவர் கே.பாலச்சந்தர் என்பதும் அந்த படம் தான் ’அவள் ஒரு தொடர்கதை’ என்பது, குறிப்பிடத்தக்கது.
கவிதா என்ற கேரக்டரில் சுஜாதா நடித்திருந்த நிலையில் அந்த படம் வெளியான போது பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கவிதா என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. கவிதா என்ற கேரக்டர் இன்றளவும் மறக்க முடியாத அளவுக்கு இருக்கிறது.
ரஜினி, கமலுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்த நடிகை: சுமித்ராவின் சொல்லப்படாத பயணம்..!
முழுக்க முழுக்க புது முகங்கள் மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரங்களை வைத்து கே.பாலச்சந்தர் இயக்கிய இந்த படம் பெண் சுதந்திரம், பெண்கள் முன்னேற்றம், பெண்கள் வளர்ச்சி, பெண்களின் சிந்தனை என்று பெண்களின் புரட்சிக்காகவே எடுக்கப்பட்ட படம் என்று கூறினால் அது மிகையாகாது. அவள் ஒரு தொடர்கதை என்பது பெண்கள் புரட்சிக்கான திரைப்படங்களில் ஒரு ஆரம்ப புள்ளி என்று கூறலாம்.
குடும்பத்தை விட்டு ஓடிப்போன அப்பா, அக்காவுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டு விதவையாகும் தங்கை, பொறுப்பில்லாத குடிகார அண்ணன், அந்த அண்ணனை நம்பி ஒரு மனைவி மற்றும் குழந்தை, பார்வையற்ற தம்பி என மொத்த குடும்பத்தையும் ஒரே ஒரு நபர் இழுத்து பிடித்து போராடிய கேரக்டர் என்றால் அது அந்த கவிதா கேரக்டர் தான்.
தன்னுடைய தலையில் அனைத்து சுமைகளையும் சுமந்து கொண்டதால் ஏற்பட்ட எரிச்சல், குடும்பத்தினரிடம் காட்டும் கறார், காதலரிடம் பேசும் போது கூட பொடி வைத்து பேசுவது என்று அந்த கேரக்டருக்கு ஒவ்வொரு காட்சியிலும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
ஒரு கட்டத்தில் ஓடிப்போன அப்பா திரும்பி வந்தவுடன் மகிழ்ச்சி அடைந்த கவிதா அந்த கேரக்டர் சாமியாராக ஆண்டியாக வந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைவார். தன்னை ஒரு கறாரான பேர்வழி என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வீட்டில் மட்டுமின்றி அலுவலகத்திலும் அவர் அப்படியே நடந்து கொள்வார். அவருடைய மேல் அதிகாரியே அவரை பார்த்து பயப்படுவார் என்ற அளவுக்கு அவரது கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும்.
கவிதா தனது குடும்பத்திற்காக திருமணத்தை கடத்திக் கொண்டே வந்த நிலையில் தனது காதலனே ஒரு கட்டத்தில் தனது தங்கையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது அதற்கும் அவர் தனது காதலை விட்டுக் கொடுத்து உள்ளுக்குள் மனம் புழுங்கி அழுது கொண்டு இருப்பார்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் தன்னுடைய அம்மாவை வந்து சந்திக்குமாறு காதலன் கூறிய போது கவிதா சந்திக்க முன்வருவார். அப்போது அவருடைய அம்மா ’என்ன கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு ரொம்ப கர்வமாக இருக்கிறாளே? என்று கேட்டபோது ‘கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பெண் கர்வமாக இருக்கலாம், கர்ப்பமாகத்தான் இருக்கக் கூடாது’ என்று சாட்டையடி வசனத்தை வைத்திருப்பார் கே.பாலச்சந்தர்.
’அவள் ஒரு தொடர்கதை’ என்பது டைட்டிலுக்கு ஏற்ற மாதிரியே ஒவ்வொரு பாகமாக உருவாகிக் கொண்டே வந்த நிலையில் கடைசி பாகத்தில் மீண்டும் முதல் பாகமாக மாறுவதுதான் பாலச்சந்தரின் கிளைமாக்ஸ் திறமை என்பது குறிப்பிடத்தக்கது.
சுஜாதா, ஜெய் கணேஷ், கமல்ஹாசன், விஜயகுமார், ஸ்ரீபிரியா என அறிமுக நட்சத்திரங்கள் மற்றும் வளர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்களை வைத்து பாலச்சந்தர் ஒரு காவிய கவிதையாகவே இந்தப் படத்தை இயக்கியிருப்பார்.
இந்த படத்தின் வசனங்கள் இன்றளவும் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. டிவியில் இப்போது போட்டால் கூட இந்த படத்தை முழுவதுமாக உட்கார்ந்து பார்க்கும் நபர்கள் அதிகம்.
இந்த படத்தில் ஒரு பக்கத்தில் சுஜாதாவின் குடும்ப கதை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், சுஜாதாவின் தோழியான படாபட் ஜெயலட்சுமி மற்றும் அவரது அம்மாவின் கதை இன்னொரு பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே நபரை தான் காதலிக்கிறார்கள் என்று தெரிய வர ’ஒரு அம்மாவுக்கும் பொண்ணுக்கும் நடுவுல எந்த சண்டை வேண்டுமானாலும் வரலாம், சக்களத்தி சண்டை மட்டும் வரக்கூடாது’ என்று கூறும் வசனம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
கருப்பு வெள்ளையில் ஒரு காவியத்தை படைத்த பாலச்சந்தர் அதன் பிறகு பல திரைப்படங்கள் இயற்றினாலும் கடைசி வரை இதைவிட ஒரு சிறப்பான படத்தை அவரால் கூட எடுக்க முடியவில்லை என்பதுதான் இந்த படத்தின் சிறப்பு ஆகும்.