நாயக்கர் மன்னர்கள் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஊர் தாடிக்கொம்பு. இந்த மன்னர்களின் காலத்தில் தான் இந்த ஊர் உருவானது. தாடி என்றால் பனை மரம். கும்பு என்றால் கூட்டம். அதாவது பனைமரக்கூட்டம் என்பதே மருவி தாடிக்கொம்பானது.
இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த கல்யாண சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. அச்சுதேவராயரால் கட்டப்பட்டது. இவர் விஜயநகரப் பேரரசைச் சார்ந்தவர். இந்தக் கோவிலே இவ்வூருக்கு சிறப்பு.
பெருமை சேர்க்கும் வகையில் இந்தக் கோவில் சிற்பங்கள் பார்ப்பதற்கு வெகு அழகாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
தூணில் கருடன் மேல் அமர்ந்துள்ள திருமாலின் அழகிய இந்த சிற்பம், அப்படியே அந்த தூணின் கல்லிலயே வடிக்கப்பட்டது !
கோயிலின் சிறப்பு
இது போன்று இனி யாருமே செய்து விடக்கூடாது என்பதை மனதில் வைத்து செய்ததை போல.இங்கு உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றிக்கும் நகம், இமை, தசை, நரம்பு போன்ற ஒவ்வொன்றும் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கும் !.
ஒவ்வொரு சிலையும் குறைந்தது 8-9 அடி பிரம்மாண்டமானவை!
விஜயநகர மன்னர்களும், நாயக்க மன்னர்களும் போட்டிப் போட்டுகொண்டு வேலை செய்துள்ளனர்.
வாழ்கையில் ஒரு தடவை அல்ல பல தடவை சென்று காணவேண்டிய கோயில்.
தனிச்சிறப்பு
இங்குள்ள மூலவர் சௌந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி அளிக்கிறார். சௌந்தரவல்லி தாயார் சன்னதியும் உள்ளது. இசைத்தூண்கள் உள்ளன.
இந்தக் கோவிலில் ஹயக்ரீவர், சரஸ்வதி என இரு கல்வி தெய்வங்கள் காட்சி அளிக்கின்றனர்.
ஞாபக மறதி, படிப்பில் மந்தம், பேச்சுக்குறைபாடு உள்ளவர்கள் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்த்து அந்தக் கலவையை சுவாமிக்கு படையலிட்டு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்ளலாம்.
திருமணம் கைகூட, குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைப் பெற இங்குள்ள ஆண்டாளுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
அதே போல இந்தக் கோவிலில் தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது.
சக்கரத்தாழ்வார், நரசிம்மர், அஷ்ட லட்சுமிகள் ஆகியோர் உள்ளனர். விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், பெருமாளின் தசாவதாரம், லட்சுமி நரசிம்மர், வேணு கோபாலர், ஆஞ்சநேயர், சொர்ண பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
விசேஷ தினங்கள்
சித்ரா பௌர்ணமியில் சுவாமி குடகனாற்றில் இறங்கி தரிசனம், ஆண்டாளுக்கு திருக்கல்யாண வைபவம், புரட்டாசியில் நவராத்திரி உற்சவம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு அதி விசேஷமானது.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீசொர்ண ஆகார்ஷண பைரவருக்கு ஐந்து கால பூஜை நடைபெறுகிறது.
அமைவிடம்
திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கல்யாண சௌந்தரராஜப் பெருமாள் ஆலயம்.