பாகிஸ்தானில் ‘மர்ம நபர்கள்’ எனப்படும் குழுக்கள் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில், இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த முக்கிய பயங்கரவாத குழுக்களின் தளபதிகள், நிதியாளர்கள் மற்றும் பிரச்சார நெட்வொர்க் தலைவர்கள் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடர் கொலைகள் மூலம், பயங்கரவாத அமைப்புகளின் பின்னுள்ள கட்டமைப்பு மற்றும் நிதி ஆதாரங்களை அழிப்பதே நோக்கமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இது, பாகிஸ்தான் மண்ணில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள் சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள நகர் பிராந்தியம், ஜலாலாபாத் பைபாஸ் ராவல்பிண்டி – அட்டாக் பிராந்தியம், சாமன் மற்றும் தென் வஜிரிஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்துள்ளன. இவற்றுள் மிகவும் முக்கியமான சம்பவமாக, லாகூரின் வெளிப்புற பகுதியில் பைக்கில் வந்த நபர்கள், சைலன்சர்கள் பொருத்தப்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்தி நேரடியாக குறிவைத்து சுட்டு தீர்த்துள்ளனர். இந்த தொடர் இலக்கு தாக்குதல்கள், பயங்கரவாத அமைப்புகளுக்குள் ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தாக்குதல்களில், பயங்கரவாத அமைப்புகளின் பிரச்சாரம் மற்றும் நிதி பிரிவை சேர்ந்தவர்களே முக்கியமாக குறிவைக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, ஐ.எஸ்.ஐ.எஸ் பிரச்சாரகர் கித்மத்துல்லா பஜோரி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா நிதியாளர் ரஷித் முன்ஷி காத்ரி ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். காத்ரி, காஷ்மீர் முன்னணியில் செயல்படும் லஷ்கர் உறுப்பினர்களுக்குச் சம்பளம் வழங்குபவர் ஆவார். மேலும், சாதிக் @ மிக்கின் ஆஹா என்ற பிரச்சார நெட்வொர்க்கர், இந்தியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அனுதாபி கணக்குகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்.
இவர்களை தவிர, தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குகளை கண்காணித்து தேர்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் திட்ட அமைப்பாளரான’ ஃபுர்கான் மசூத், மற்றும் போலி ஆவணங்கள், சிம் கார்டுகளை தயாரித்து வழங்கும் ஆவணங்கள் மோசடி நிபுணரான இம்ரான் பாஞ்சவி ஷா ஆகியோரும் குறிவைக்கப்பட்டு சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் அனைவரும், களத்தில் தாக்கும் வீரர்களுக்கு பின்னால் இருந்து நிதி, தகவல் தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்.
இந்த கொலைகள் அனைத்தும் பயங்கரவாத அமைப்புகளின் கள தாக்குதல்தாரிகளை தாண்டி, அவர்களுக்கு பின்னால் இருந்து ஆதரவளிக்கும் தகவல் தொடர்பு சங்கிலிகள், நிதி வழங்குபவர்கள், ஆவண மோசடி நிபுணர்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் அமைப்பாளர்களை இலக்கு வைத்துள்ளன. இந்த ஆதரவு அமைப்பை ஒரு கட்டிடத்தின் ‘சாரம்’ போல ஒப்பிட்டால், தற்போது அந்த சாரத்தை அகற்றுவது போன்ற ஒரு நடவடிக்கை நடைபெறுகிறது. இந்த சாரம் அகற்றப்படும்போது, பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளின் நிலைத்தன்மை கடுமையாக குலைக்கப்படும்.
பயங்கரவாத அமைப்புகளின் தளபதிகளை தாக்குவது ஒருபுறம் இருந்தாலும், அவர்களுக்கு நிதி மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை வழங்கும் இத்தகைய பின்னணி பணியாளர்கள் குறிவைக்கப்படுவது, அவர்களின் வேர்களை பலவீனப்படுத்தும் ஒரு முக்கியமான செயல் உத்தியாக பார்க்கப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் லஷ்கர் போன்ற அமைப்புகள் தங்கள் செயல்பாடுகளை பாகிஸ்தானுக்கு வெளியே நகர்த்த முயற்சிக்கும் நிலையில், இந்தத்தொடர் இலக்கு தாக்குதல்கள் அவர்களின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
