டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை.. ரஷ்யாவுக்கு நிலப்பரப்பு.. டிரம்புக்கு நோபல் பரிசு வாய்ப்பு.. இந்தியாவுக்கு வரிவிதிப்பில் விலக்கு.. ஆனால் உக்ரைனுக்கு மட்டும் அல்வா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து விவாதிக்க அலாஸ்காவில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு, போரை முடிவுக்கு கொண்டுவந்து உலக சமாதானத்தை…

trump putin1

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து விவாதிக்க அலாஸ்காவில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு, போரை முடிவுக்கு கொண்டுவந்து உலக சமாதானத்தை பேணுபவர் என்ற பெயரை பெற்று, அதன் மூலம் நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்ற டிரம்பின் ஆசையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை, இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் நேரடி சந்திப்பாகும்.

டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு திரும்பிய பிறகு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொடரும் உக்ரைன் போருக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இந்த சந்திப்பிற்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அழைக்கப்படவில்லை. இதனால், டிரம்ப் உக்ரைனை விற்றுவிடுவாரோ அல்லது அதன் நிலப்பகுதிகளை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்குமாறு வற்புறுத்துவாரோ என்று உக்ரைனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் அச்சம் தெரிவித்துள்ளன.

டிரம்ப், புதினுடனான இன்றைய பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், உடனடியாக ஜெலன்ஸ்கியுடன் ஒரு முத்தரப்பு சந்திப்பை நடத்துவது அதைவிட முக்கியமானது என்று தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா ஒரு சமரசத்திற்கு தயாராக இருக்கலாம் என்று அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், போர் நிறுத்தம் மற்றும் அணு ஆயுத கட்டுப்பாடு குறித்து இரு தரப்பிலும் சில உடன்பாடுகள் எட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் மேற்கத்திய தடைகளால், ரஷ்யாவின் பொருளாதாரம் சில அழுத்தங்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில், டிரம்ப் மேலும் தடைகளை விதிக்காமல் இருக்க வேண்டும் என்றும், தற்போதைய தடைகளை நீக்க உதவ வேண்டும் என்றும் புதின் எதிர்பார்க்கிறார்.

உக்ரைன், ரஷ்யாவிடம் எந்த நிலப்பகுதியையும் முறையாக ஒப்படைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனாலும் டிரம்ப், நிலப்பகுதிகளை மாற்றுவது குறித்து பேசலாம் என்று கூறியுள்ள நிலையில், உக்ரைன் இந்த பேச்சுவார்த்தையின் முடிவை ஒப்புக்கொள்ளாது என்றாலும் ஒப்புக்கொள்ள அமெரிக்கா நிர்ப்பந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ரஷ்யப் படைகள் உக்ரைனின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பை தன்வசப்படுத்தியிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த நிலப்பரப்பை நிரந்தரமாக உக்ரைன் இழக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பு, டிரம்புக்கு நோபல் பரிசை பெறும் வாய்ப்பையும், ரஷ்யாவுக்கு நிலப்பரப்பு சொந்தமாகும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் இந்தியாவும் வரிவிதிப்பில் இருந்து தப்பிவிட வாய்ப்பு உள்ளது.