சர்வதேச அளவில் வளர்ந்து வரும் அரசியல் மாற்றங்கள், குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் அதன் நீண்டகால நட்பு நாடுகளான கத்தார், துருக்கி மற்றும் அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் பெரிதாகி வருவதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் மிக நெருங்கிய நட்பு நாடாக கருதப்படும் கத்தார், சமீபகாலமாக தனது நிலைப்பாட்டில் மேற்கொண்டு வரும் மாற்றங்கள் சர்வதேச அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கத்தாரை தளமாக கொண்டு இயங்கும் அல் ஜசீரா ஊடகம், இந்தியாவின் வரைபடத்தை முழுமையாக காட்டியும், பலூச் பிரிவினைவாதிகளுக்கு மேடை அமைத்து கொடுத்தும் வருவது பாகிஸ்தானை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுவரை பாகிஸ்தானின் இராணுவ மற்றும் பொருளாதார நலன்களுக்கு ஆதரவாக இருந்த கத்தார், இப்போது தாலிபான்களுடனான தனது உறவை முன்னிறுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவதாக தெரிகிறது. தாலிபான்களின் தலைமையகம் கத்தாரில் உள்ள நிலையில், அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் தாக்குதல்களை கத்தார் கண்டிக்காமல் மௌனம் காப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பில் ஏற்பட்டுள்ள பெரும் விரிசலை உறுதிப்படுத்துகிறது.
தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு, ஒரு சிக்கலான முக்கோண போட்டியாக மாறியுள்ளது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு, தாலிபான்கள் பாகிஸ்தானின் சொல்படி நடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, தாலிபான்கள் இப்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவுடன் நேரடி உறவுகளை வளர்த்து கொண்டு, பாகிஸ்தானின் ஆதிக்கத்தை தகர்த்து வருகின்றனர். கத்தார், இந்த மாற்றத்திற்கு முக்கிய பின்னணியாக இருந்து செயல்படுகிறது. பாகிஸ்தான் இராணுவம் ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவை அச்சுறுத்த நினைத்த அதே தந்திரத்தை, இன்று தாலிபான்கள் மற்றும் டிடிபி அமைப்பினர் பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இது பாகிஸ்தான் இராணுவம் தான் வெட்டிய குழியில் தானே விழுந்து கிடப்பதையே காட்டுகிறது.
துருக்கியின் செயல்பாடுகளும் பாகிஸ்தானுக்கு சாதகமாக இல்லை என்பது அண்மைக்கால நிகழ்வுகள் மூலம் புலனாகிறது. பாகிஸ்தான் – தாலிபான் எல்லை மோதல்களின் போது, துருக்கியை தளமாகக் கொண்டு இயங்கும் சில அமைப்புகள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகக் கடுமையான அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் துருக்கி அரசு தடுத்து நிறுத்தவில்லை என்பது கவனித்தக்கது. மேலும், பாகிஸ்தான் இராணுவம் தனது துருப்பு சீட்டாகப் பயன்படுத்தி வந்த ‘இஸ்லாமிய நேட்டோ’ என்ற கனவும் துருக்கி மற்றும் சவுதி அரேபியாவின் தனிப்பட்ட நலன்களால் கலைந்துவிட்டது. துருக்கியும் கத்தாரும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்பதால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் பாகிஸ்தானை ஆதரிக்க போவதில்லை என்பது தெளிவாகிறது. இதனால், சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் மெல்ல மெல்ல தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார சரிவு மற்றும் இராணுவ பலவீனம் காரணமாக, அந்த நாடு ரஷ்யா மற்றும் லிபியா போன்ற நாடுகளுடன் புதிய உறவுகளை தேடி ஓடுகிறது. உக்ரைன் போர் தொடங்கிய சமயத்தில் இம்ரான்கான் ரஷ்யா சென்றது முதல், இப்போது லிபியாவில் உள்ள ரஷ்ய ஆதரவு இராணுவ தளபதிகளுடன் பாகிஸ்தான் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் வரை அனைத்தும் அமெரிக்காவை கோபப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இராணுவம் தனது வீரர்களை மற்ற நாடுகளுக்காகக் கூலிப்படையாக அனுப்பும் வேலையை தீவிரப்படுத்தியுள்ளது. ஏமன் மற்றும் சிரியா போன்ற போர்முனைகளில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்களும், சில நேரங்களில் இராணுவ வீரர்களும் களமிறக்கப்படுவது அந்த நாட்டின் அவநம்பிக்கையான நிலையையே காட்டுகிறது.
மறுபுறம், சீனாவின் முதலீடுகளும் பாகிஸ்தானில் குறைய தொடங்கியுள்ளன. பாகிஸ்தானில் உள்ள சீன பொறியாளர்கள் மற்றும் குடிமக்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களால் சீனா கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் பாகிஸ்தான் வளர்த்தெடுத்த சில தீவிரவாத குழுக்களே இருப்பதாக சீனா சந்தேகிக்கிறது. சீனாவின் ‘சிபெக்’ திட்டம் முடங்கி கிடப்பதும், பாகிஸ்தான் தனது கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறுவதும் சீனாவின் பிடியிலிருந்து பாகிஸ்தான் நழுவி வருவதை காட்டுகிறது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு துருவங்களுக்கும் இடையில் சிக்கி கொண்டுள்ள பாகிஸ்தான், யாரிடமும் முழுமையான ஆதரவை பெற முடியாமல் தவிக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை, பாகிஸ்தானை சுற்றியுள்ள நாடுகள் மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான உறவு பலப்பட்டு வருவது சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் இராணுவம் தனது சொந்த நாட்டு எல்லைகளுக்குள்ளேயே தாலிபான்கள் மற்றும் பலூச் வீரர்களுடன் போராடி வருவதால், இந்தியாவிற்கு எதிரான அவர்களின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. சர்வதேச சமூகம் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத உற்பத்தி மையமாக பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருளாதார தேவையற்ற தன்மையையும் உணர தொடங்கியுள்ளது. மொத்தத்தில், பாகிஸ்தான் இராணுவம் தான் உருவாக்கிய தீவிரவாத வலையிலேயே சிக்கி கொண்டுள்ள நிலையில், கத்தார் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் அதிலிருந்து வெளியேற தொடங்கியிருப்பது தெற்காசிய அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை குறிக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

