செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்கும் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஸ்டார்லிங்க் பல்வேறு நாடுகளில் தனது சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் காவல்துறை அமைச்சர், ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு தற்காலிகமாக நாட்டில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, பாகிஸ்தானில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் முக்கிய கட்டமாக இது அமையும் என அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கட்டண செலுத்துதல் மற்றும் பிற அனுமதி விதிமுறைகளை கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில், நாடு டிஜிட்டல் மாற்றத்திற்காக முன்னேறி வருகிறது. இணையதள சேவைகளை மேம்படுத்த செயற்கைக்கோள் இன்டர்நெட் போன்ற தீர்வுகள் முக்கியம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சைபர் குற்றப்பிரிவு, பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் பாகிஸ்தான் விண்வெளி ஒழுங்குமுறை ஆகிய அமைப்புகளின் ஆலோசனையின் பேரில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், எலான் மஸ்க் பாகிஸ்தானில் ஸ்டார்லிங்க் சேவையை தொடங்க விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அந்நாட்டு அரசு தற்காலிக அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.