22 வருடத்திற்கு முன் காணாமல் போன நபர்.. போலீசாரால் முடியாததை கூகுள் எர்த் மூலம் நிறைவேற்றிய இளைஞர்..

By Ajith V

Published:

ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் டிஎன்ஏ சோதனை உள்ளிட்டவற்றின் வளர்ச்சி குறைவாக இருந்ததால் நிறைய குற்ற வழக்குகள் தீர்வு கிடைக்காமல் அப்படியே இருந்து வந்தது. இதன் பின்னர், டிஎன்ஏ மூலம் நிறைய வழக்குகளின் முடிவுகள் தெரிய வந்த காலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கப்படாமல் இருந்த வழக்குகளை கூட தீர்க்க தொடங்கினர்.

குற்றம் நடந்த இடத்தில் கிடந்த ரத்தங்களின் டிஎன்ஏ மாதிரி கொண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடிக்க நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, இது போன்ற வழக்குகளை இன்னும் எளிதாக்கி இருந்தது. அப்படி இருந்தும் காணாமல் போன நபர் பற்றி 22 ஆண்டுகள் காவல் துறையினரால் எதுவும் கண்டுபிடிக்க முடியாத சூழலில், கூகுள் எர்த் மூலம் இளைஞர் கண்டுபிடித்த விஷயம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி, William Moldt என்ற நபர் ப்ளோரிடாவின் லண்டானா என்ற பகுதியில் திடீரென மாயமாக மறைந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் வெளியே சென்றிருந்த நிலையில், 9:30 மணி அளவிற்கு தனது காதலியை அழைத்த வில்லியம், இன்னும் கொஞ்ச நேரத்தில் வீடு திரும்பி விடுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கே வில்லியம் திரும்பவில்லை என கூறப்படுகிறது. அவர்கள் இருவரின் கடைசி உரையாடலாகவும் அந்த போன் கால் அமைந்திருந்த சூழலில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லியம் எங்கே போனார் என்பது பற்றி ஒரு தகவலையும் போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை.

அவர் எங்கே போனார், உயிரோடு இருக்கிறாரா, யாராவது அவரை கொலை செய்து விட்டார்களா என்று கூட நிறைய கேள்விகள் எழுந்தாலும் அதற்கு விடை எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக, பல்வேறு கட்ட விசாரணைகளும் பலனளிக்காமல் போயுள்ளது.

இந்த நிலையில் தான், சுமார் 22 ஆண்டுகள் கழித்து வில்லியமிற்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு விடை கிடைத்திருந்தது. கூகுள் மேப் போல கூகுள் எர்த் (Google Earth) மூலம் நிறைய இடங்களை நாம் பார்க்க முடியும். அந்த வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெல்லிங்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் முன்பு தங்கியிருந்த வீட்டை கூகுள் எர்த் மூலம் பார்த்துள்ளார்.

அப்போது அந்த வீட்டின் அருகே இருந்த குளம் ஒன்றின் நீருக்குள் கார் இருப்பதை அந்த இளைஞர் கவனித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அதற்கு அருகே வசிக்கும் நபரை அழைத்து அது என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க கூறியுள்ளார். தொடர்ந்து அவரும் பார்த்த போது அங்கே வெள்ளை நிற கார் ஒன்று மூழ்கி இருப்பதை டிரோன் மூலம் பார்த்துள்ளார்.

உடனடியாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் காரை மீட்டு பார்த்த போது அதில் எலும்புக்கூடு ஒன்று இருந்துள்ளது. இதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், அது வில்லியம் என்பதும் அவருடைய கார் என்பதும் தெரிய வந்தது.

இதில் பலரையும் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விஷயம் என்றால், அந்த கார் 2007 ஆம் ஆண்டு முதலே கூகுள் எர்த்தில் தெரிந்தது என்பது தான். இருந்தும் அதில் பார்த்தவர்கள் பெரிதாக கண்டு கொள்ளாமல் போக, 12 ஆண்டுகள் கழித்து தான் ஒரு நபரால் விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லியம் கார் ஓட்டிய போது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் சென்றிருக்கலாம் என்றும் போலீசார் கருதி உள்ளனர்.

மேலும் உங்களுக்காக...