சூப்பர் மார்க்கெட்டிற்குள் காணாமல் போன நபர்.. 10 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் காத்திருந்த மர்மம்..

Published:

வாலிபர் ஒருவர் காணாமல் போன சூழலில், 10 ஆண்டுகள் கழித்து அவரை பற்றி தெரிய வந்த விஷயம், அப்பகுதி மக்களை திடுக்கிட வைத்துள்ளது. இந்த உலகில் முடிக்கவே முடியாத வழக்குகள் பலவும் சாமர்த்தியமாக போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்ற வழக்குகளின் முடிவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் அதே வேளையில், மிக எளிதாக முடிய கூடிய வழக்குகள் கூட ஏதாவது ஒரு சிறிய கவனக் குறைவால் முடிவையே எட்டாமல் நிறைய மர்மங்களை கொண்டு தொடர்ந்த படி இருக்கும். அப்படி ஒரு சூழலில், கடந்த 2009 ஆம் ஆண்டு வீட்டில் இருந்து தான் பணிபுரியும் சூப்பர் மார்கெட்டிற்கு சென்ற வாலிபர் திரும்பி வராமல் போக, 10 ஆண்டுகள் கழித்து அதன் மர்ம முடிச்சும் அவிழ்ந்திருந்தது.

US பகுதியின் அயோவா என்னும் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் தான் Larry ely murillo-moncada என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு திடீரென காணாமல் போன நிலையில், 10 ஆண்டுகள் கழித்து அவர் எங்கே போனார் என்பதும் தெரிய வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அவர் காணாமல் போன சமயத்தில் அவரது தாயார் தனது மகன் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த போது தான் காணாமல் போனார் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆனால், அவரை மற்ற அனைத்து இடங்களிலும் தேடியும் கிடைக்காமல் போனதால் லேரிக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் இருந்து வந்தது. இதனிடையே, 10 ஆண்டுகள் கழித்து அதே சூப்பர் மார்க்கெட்டில் இருந்து லேரியின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஒரு துர்நாற்றம் வருவதாக அங்கே பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலரும் கவனித்துள்ளனர்.

ஆனால், இதனை அந்த நிர்வாகத்தினர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. அப்படி ஒரு சூழலில், அந்த சூப்பர் மார்க்கெட்டை மூடுவதற்காக அங்கிருந்த ப்ரீசர் ஒன்றை நீக்கிய போது தான் அதற்கும் சுவருக்கும் இருந்த சிறிய இடைவெளியில் தலைகீழாக ஒரு மனித எலும்புக் கூடு இருப்பது தெரிய வந்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன லேரியின் உடல் தான் அது என்பதும் பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. இது பற்றி வெளியான தகவலின் படி, ப்ரீசர் மேல் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்த லேரி, யாரும் எதிர்பாராத வகையில் அதற்கும் சுவருக்கும் இடையே இருந்த கேப்பில் விழுந்ததாக கூறப்படுகிறது. தலைகீழாக விழுந்த லேரி எழும்பக் கூட முடியாமல் சிக்கித் தவிக்க, ஃப்ரீசரின் சத்தத்தால் லேரி உதவிக்கு அழைத்ததும் யாருக்கும் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், அதிலிருந்து நிமிர முடியாமல், தலைக்கீழாகவே இருந்து பிரிட்ஜின் வெப்பத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்படியும் ஒருவருக்கு இறப்பு வருமா என பலரையும் பதற வைக்கும் அளவுக்கு இந்த சம்பவத்தின் பின்னணி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...