பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் மற்றும் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் தேச விரோத சக்திகள், அடையாளம் தெரியாத நபர்களால் அடுத்தடுத்து வேட்டையாடப்படுவது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாத கும்பலை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற அமைப்புகளின் முக்கிய தூண்களாக கருதப்பட்ட நபர்கள் குறிவைக்கப்படுவது, அந்த அமைப்புகளுக்குள்ளேயே ஒருவித அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் விதைத்துள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய நிகழ்வுகளில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஊடகப்பிரிவின் முக்கியப் புள்ளியான அபு ஹம்சா பஞ்சாபி கொல்லப்பட்டிருப்பது அந்த அமைப்பிற்கு பலத்த அடியாகும். இவர் ஜம்மு காஷ்மீரின் ரியாசி பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பின்னால் ஊடக பிரச்சாரங்களை முன்னெடுத்தவர் என்று கூறப்படுகிறது. லாகூர் அருகே மர்ம நபர்களால் இவர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இவருடைய இறுதிச் சடங்குகள் மற்றும் தகவல்கள் கசியாமல் இருக்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இருப்பினும், பயங்கரவாத குழுக்களுக்கு இடையே பகிரப்படும் ரகசிய தகவல்கள் மூலம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் மூத்த தளபதியான காரி சாகிப் என்பவரது மரணம் அந்த அமைப்பை நிலைகுலைய செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதிலும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதிலும் இவர் கடந்த 50 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்தார். கோட்லி பகுதியில் இவர் கொல்லப்பட்ட பிறகு, பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் இவரது உடல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பயங்கரவாத வலைப்பின்னலில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இவ்வாறு குறிவைக்கப்படுவது, பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ ஊடுருவி விட்டதை காட்டுகிறது.
பயங்கரவாதிகளின் தகவல் தொடர்பு வலையமைப்பை சிதைக்கும் விதமாக, உமர் காஷ்மீரி போன்ற ‘சிம் கார்டு’ மற்றும் விபிஎன் நிபுணர்களும் இந்த தாக்குதலில் தப்பவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பயங்கரவாத ஸ்லீப்பர் செல்களுக்கும், பாகிஸ்தானில் உள்ள அவர்களின் கையாட்களுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்தி வந்த இவர், மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பான செய்திகள் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கசிந்த நிலையில், அவரது குடும்பத்தினர் பதிவிட்ட இரங்கல் செய்திகளை பாகிஸ்தான் அரசு துறையினர் அவசரம் அவசரமாக நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப ரீதியாக பலம் வாய்ந்த இத்தகைய நபர்களின் இழப்பு, பயங்கரவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்பைச் சிதைத்துள்ளது.
மரணங்கள் மட்டுமன்றி, பயங்கரவாத தலைவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படும் புதிய பாணி தாக்குதல்களும் தற்போது அரங்கேறி வருகின்றன. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணைத்தலைவரான ரிஸ்வான் ஹனீப்பின் இல்லம் ராவலாகோட் பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக புதிய வகை ‘ஆயுதங்கள்’ பயன்படுத்தப்படுவதை இது உணர்த்துகிறது. முன்பெல்லாம் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புகள் மூலம் நடந்த வேட்டை, இப்போது மர்மமான விபத்துக்கள், தூக்கத்திலேயே ஏற்படும் மரணங்கள் மற்றும் தீ விபத்துக்கள் எனப் பரிணாமம் அடைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், பாகிஸ்தான் மண்ணில் செயல்பட்டு வந்த இந்திய எதிர்ப்பு சக்திகள் இப்போது தங்களுக்குள்ளேயே எதிரிகளை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐ-யும் இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டதாக பயங்கரவாதக் குழுக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது. இந்த ‘அடையாளம் தெரியாத நபர்களின்’ வேட்டை இந்திய எல்லை பாதுகாப்பிற்கு மறைமுகமாக பெரும் வலுசேர்ப்பதாக பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் எதிரிகள் மண்ணுக்குள் புதைக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வும், தேச பாதுகாப்பில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
