டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் இடையேயான அலாஸ்கா உச்சி மாநாடு, உக்ரைன் மீதான நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே நிலவும் ஆழமான பிளவுகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டிற்கு பிறகு, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஒரு அறிக்கையை வெளியிட்டார், ஆனால் 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் வெறும் 5 நாடுகள் மட்டுமே டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்தன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிளவு
அமெரிக்க அதிபர் டிரம்ப், “நிபந்தனைகள் இல்லாத போர் நிறுத்தம்” என்ற அழைப்பை விடுத்திருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மாநாட்டிற்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட தவறிவிட்டன. இது, உக்ரைன் மோதல் குறித்த ஐரோப்பாவின் ஒற்றுமை கேள்விக்குறியாகியுள்ளது என்பதை உணர்த்துகிறது.
உக்ரைனுக்கு அழைப்பு இல்லை
உக்ரைன் போரை மையமாக கொண்ட இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைக்கப்படவில்லை. இது, சர்வதேச அரங்கில் உக்ரைனின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தலாம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், டிரம்ப், நாளை ஜெலென்ஸ்கியை வாஷிங்டனில் சந்திக்க உள்ளதாகவும், அதை தொடர்ந்து ஆகஸ்ட் 22 அன்று ஜெலென்ஸ்கி மற்றும் புடின் ஆகிய இருவரையும் உள்ளடக்கிய முத்தரப்பு சந்திப்புக்கு தான் தயாராக இருப்பதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியக் கொள்கைகளில் மாற்றம் இல்லை
இந்த நிலையில் தான் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை, டிரம்பின் போர் நிறுத்த கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லை. அதற்கு பதிலாக, உக்ரைனுக்கு ராணுவ ஆதரவு அளிப்பது, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் சேருவதை ரஷ்யா தடுக்க முடியாது என்பது போன்ற தற்போதைய நிலைப்பாடுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிகழ்வுகள், உக்ரைன் குறித்த விவகாரத்தில் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த குரல் பலவீனமடைந்து வருவதை காட்டுகிறது. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் தலைமையில் ஒரு தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
