இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது எங்களுக்கு ‘தெய்வீக உதவி’ கிடைத்தது.. ஆசிம் முனீர் பேச்சு.. அது ‘தெய்வீக உதவி’ இல்லை, இந்தியாவின் பிரமோஸ் ஒளி.. இந்திய நெட்டிசன்கள் கிண்டல்.. மதத்தின் பெயரில் மக்களை ஏமாற்றாமல் தொழில்நுட்ப ராணுவத்தை கட்டமையுங்கள்.. சர்வதேச நெட்டிசன்கள் அறிவுரை..!

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது தங்களுக்கு ‘தெய்வீக உதவி’ கிடைத்ததாக கூறி மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். கடந்த மே மாதம் இந்திய ராணுவம் பயங்கரவாத…

asim munir

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது தங்களுக்கு ‘தெய்வீக உதவி’ கிடைத்ததாக கூறி மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.

கடந்த மே மாதம் இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை தாக்கிய போது ஏற்பட்ட மோதலில், பாகிஸ்தானுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி துணையாக இருந்ததை உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட அவரது உரையில், “அந்த தெய்வீக உதவியை நாங்கள் நேரடியாகவே உணர்ந்தோம்” என்று அவர் குறிப்பிட்டிருப்பது சர்வதேச அளவில் கேலி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மே 7-ஆம் தேதி பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பதிலடி தாக்குதலை தொடங்கியது. மே 7 முதல் 10 வரை நீடித்த இந்த மோதலில், இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் குண்டுகளை பயன்படுத்தி வெறும் 23 நிமிடங்களில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்ததாக இந்தியா தெரிவித்தது. இந்த சூழலில் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படும் ‘தெய்வீக உதவி’ குறித்த கருத்துக்கள் இந்தியாவின் ராணுவ வலிமைக்கு முன்னால் வைக்கப்பட்ட ஒரு பலவீனமான வாதமாக பார்க்கப்படுகிறது.

முன்னாள் அரேபிய பகுதியில் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு இறைத்தூதரால் நிறுவப்பட்ட அரசுடன் இன்றைய பாகிஸ்தானை ஒப்பிட்டு முனீர் பேசினார். குரானின் பல வசனங்களை மேற்கோள் காட்டி பேசிய அவர், இஸ்லாமிய உலகில் பாகிஸ்தானுக்கு என்று ஒரு தனித்துவமான அந்தஸ்து இருப்பதை வலியுறுத்தினார். உலகிலுள்ள 57 இஸ்லாமிய நாடுகளில், புனிதத்தலங்களான மெக்கா மற்றும் மதினாவின் பாதுகாவலர்களாக இருக்கும் கௌரவத்தை இறைவன் தங்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடனான பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்தும் ஆசிம் முனீர் தனது உரையில் எச்சரிக்கை விடுத்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, பாகிஸ்தான் விரோத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். எல்லை தாண்டி ஊடுருவும் பயங்கரவாத குழுக்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், மேற்கு எல்லையில் நிலவும் அச்சுறுத்தல்கள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

இஸ்லாமியக் கொள்கைகளின்படி ‘ஜிஹாத்’ குறித்து பேசிய அவர், ஓர் இஸ்லாமிய நாட்டில் அந்த நாட்டு அரசாங்கத்தை தவிர வேறு யாரும் ஜிஹாதிற்கு உத்தரவிட முடியாது என்று குறிப்பிட்டார். அதிகாரத்தில் இருப்பவர்களின் அனுமதி மற்றும் விருப்பம் இல்லாமல் யாரும் ஜிஹாதிற்கான ‘பத்வா’ வழங்க முடியாது என்றும் அவர் உலமாக்கள் மாநாட்டில் திட்டவட்டமாக தெரிவித்தார். இதன் மூலம் தனிநபர்களோ அல்லது ஆயுத குழுக்களோ தன்னிச்சையாகப் போர் பிரகடனம் செய்வதை அவர் கண்டித்தார்.

ஆசிம் முனீரின் இந்த ‘தெய்வீக உதவி’ குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது. இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய உலமாக்கள் மாநாட்டில் அவர் ஆற்றிய இந்த உரை குறித்து நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, “உங்களுக்குக் கிடைத்தது தெய்வீக உதவி அல்ல, இந்திய பிரமோஸ் ஏவுகணைகளின் சத்தம்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். நவீன காலப் போரில் தொழில்நுட்ப வலிமையை மறைக்க மதம் சார்ந்த கருத்துக்களைத் தளபதி பயன்படுத்துவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.