வங்கதேசத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை விரைவாக நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுக்கு தடையாக இருக்காது என்றும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் வெளியுறவு விவகார ஆலோசகர் முஹம்மது துஹைத் ஹுசைன், டாக்கா நகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த கருத்தைத் தெரிவித்தார். ஹசீனா தற்போது நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும், அவரை விரைவில் இந்தியா தங்களிடம் ஒப்படைக்கும் என்று வங்கதேசம் எதிர்பார்ப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டங்களின் மீதான கொடூர ஒடுக்குமுறைகள் தொடர்பான மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, ஷேக் ஹசீனாவுக்கு நவம்பர் 17 அன்று சிறப்புத் தீர்ப்பாயம் நேரடியாக ஆஜராகாத நிலையில் மரண தண்டனை விதித்தது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜூலை எழுச்சியின் மூலம் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். அதற்கு முன்பே, ஷேக் ஹசீனாவை வங்கதேச நீதிமன்றம் ஓடி ஒளிந்தவர் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், நீதித்துறை செயல்முறை முடிந்த பிறகு, ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின் கீழ், புதுடெல்லியில் உள்ள தனது உயர் ஆணையத்தின் மூலம் வங்கதேசம் புதிய நாடு கடத்தல் கோரிக்கையை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலமாகவும் ஹசீனாவை பெற வங்கதேசம் முயற்சிக்கும் என்றும் கூறப்படுகிறது.
முஹம்மது துஹைத் ஹுசைன் பேசுகையில், முகமது யூனுஸ் தலைமையிலான தற்காலிக அரசாங்கத்தின் கீழ் நிலவும் புதிய யதார்த்தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள இந்தியாவுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்று கூறினார். எனினும், இருதரப்பு உறவுகள் மேம்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவின் சமீபத்திய அறிக்கையில், வங்கதேசத்தின் தீர்ப்பை தாம் கவனித்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளதுடன், வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம், உள்ளடக்கம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும், அனைத்து பங்குதாரர்களுடனும் ஆக்கபூர்வமாக ஈடுபடும் என்றும் கூறியுள்ளது.
இதனிடையே, 74 பேர் கொல்லப்பட்ட வங்கதேச ரைபிள்ஸ் கிளர்ச்சி குறித்து விசாரித்த தேசிய சுதந்திர விசாரணை ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ‘கிரீன் சிக்னலுடன்தான்’ இந்த கிளர்ச்சி நிறைவேற்றப்பட்டது என்று அந்த ஆணையம் கூறுகிறது.
மேலும், அவாமி லீக்கின் நேரடித் தலையீடு மற்றும் வெளி சக்திகளின் வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை குற்றம் சாட்டுகிறது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஷேக் ஃபாய்சனூர் தபோஷ் தான் முக்கிய ஒருங்கிணைப்பாளராக அடையாளம் காணப்பட்டார் என்றும், ராணுவத் தளபதி, காவல்துறை, ஆர்ஏபி மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் முழுமையான தோல்வியே இந்த நிகழ்வுக்குக் காரணம் என்றும் ஆணையம் விமர்சித்துள்ளது. ஊடகங்களின் சில பிரிவுகளையும் இந்த ஆணையம் விமர்சித்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
