வங்கதேச பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு சில தினங்களில், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் சிறப்பு உதவியாளர் ஃபைஸ் அகமது தயேப் திடீரென ஜெர்மனிக்கு சென்றிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தி டெய்லி ஸ்டார்’ பத்திரிகை இதனை ஒரு “எதிர்பாராத வெளியேற்றம்” என்று வர்ணித்துள்ளது. யூனுஸின் ஆட்சி முடிவுக்கு வரும் வேளையில், அவரது உதவியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் பாதுகாப்பான முறையில் நாட்டை விட்டு வெளியேற வழிதேடுவதாக பல மாதங்களாக நிலவி வந்த வதந்திகளுக்கு இந்த சம்பவம் உயிர் கொடுத்துள்ளது. எனினும், தற்போதைய சூழலில் மற்ற அதிகாரிகள் உடனடியாக வெளியேற திட்டமிடவில்லை என்று டாக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகமது யூனுஸின் இடைக்கால ஆட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இன்றே தேர்தலில் வெற்றி பெற்ற பிஎன்பி தலைமையிலான புதிய அரசிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட உள்ளது. பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று மாலை வங்கதேசத்தின் புதிய பிரதமராக பதவியேற்கிறார். ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பதவியேற்ற யூனுஸ் நிர்வாகம், வெற்றிகரமாக ஒரு தேர்தலை நடத்தி முடித்து, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஆட்சியை ஒப்படைப்பது ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
யூனுஸ் தலைமையிலான இந்த இடைக்கால நிர்வாகத்தின் சட்டபூர்வத்தன்மை குறித்து ஆரம்பத்திலிருந்தே பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. வங்கதேச அரசியலமைப்பில் இத்தகைய இடைக்கால ஏற்பாட்டிற்கு நேரடி இடமில்லை என்பதால், இது ஒரு “சட்டவிரோத” ஆட்சி என்று விமர்சகர்கள் கூறி வந்தனர். சுமார் 18 மாத கால ஆட்சியில், வெளிநாடுகளுடன் பல முக்கியமான ஒப்பந்தங்களை யூனுஸ் அரசு மேற்கொண்டது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டிய நீண்டகால கொள்கை முடிவுகளை, ஒரு தற்காலிக நிர்வாகம் மேற்கொண்டது அரசியல் சாசன வல்லுநர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக, தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்ட ‘ஜூலை சார்ட்டர்’ தொடர்பான பொதுவாக்கெடுப்பு, இடைக்கால அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என்று விமர்சிக்கப்பட்டது. இதற்கு பிஎன்பி கட்சியும் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில், யூனுஸின் ஆலோசகர்கள் வருங்காலத்தில் சட்ட ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்ற பயத்தினாலேயே அவர்கள் பாதுகாப்பான வெளியேற்றத்தை எதிர்பார்ப்பதாக கூறப்பட்டது. கடந்த அக்டோபர் மாதமே, சில ஆலோசகர்கள் அரசியல் கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக புகார்கள் எழுந்தன.
இருப்பினும், தற்போதைய அதிகார மாற்றம் மிகவும் சுமூகமாக நடைபெற்று வருவதால், ஆலோசகர்கள் மத்தியில் இருந்த அச்சம் குறைந்துள்ளதாக தெரிகிறது. முகமது யூனுஸுடன் பணியாற்றிய பல அதிகாரிகள் இப்போது வங்கதேச அரசியலின் முக்கிய நீரோட்டத்தில் இணைந்துவிட்டனர். பிஎன்பி அரசுக்கும் இவர்களுக்கும் இடையே ஒருவித இணக்கமான சூழல் நிலவுவதால், ஃபைஸ் அகமது தயேப்பை தவிர மற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆலோசகர் சையதா ரிஸ்வானா ஹசன் போன்றவர்கள், தாம் வங்கதேசத்திலேயே தங்கி மக்கள் பணியாற்றுவேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இன்று தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்பதன் மூலம், வங்கதேசத்தில் மீண்டும் ஒரு முழுமையான ஜனநாயக ஆட்சி மலர்கிறது. யூனுஸின் உதவியாளர்கள் தொடர்பான சர்ச்சைகள் ஓய்ந்து, புதிய அரசின் செயல்பாடுகளை நோக்கி இப்போது ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் திரும்பியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

