விபத்தில் வாய் வழியாக உள்ளே சென்ற 15-Inch இரும்புக்கம்பி.. இருப்பினும் உயிர் பிழைத்த அதிசயம்..!

  தென் சீனாவில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஊழியர் ஒருவரின் வாயின் வழியாக ஒரு இரும்புக் கம்பி தலையில் ஊடுருவி பின்னந்தலை வழியாக வந்த நிலையிலும்  10 மணி நேர   அறுவை சிகிச்சைக்கு…

rod

 

தென் சீனாவில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஊழியர் ஒருவரின் வாயின் வழியாக ஒரு இரும்புக் கம்பி தலையில் ஊடுருவி பின்னந்தலை வழியாக வந்த நிலையிலும்  10 மணி நேர   அறுவை சிகிச்சைக்கு பிறகு,  உயிருடன் மீண்டுள்ளார் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் சீனாவில் அக்யாங் என்ற ஊழியர் சக ஊழியர்களுடன் உணவு  சாப்பிட்டு கொண்டிருந்தபோது திடீரென டேபிளில் இருந்த ஒரு நீளமான இரும்புக் கம்பி  சரிந்து அவருடைய வாயின் வழியாக உட்புகுந்து உள்ளது.

அவரது வாயிலிருந்து ரத்தம் கொட்டுவதை பார்த்து அவரது சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஷென்சென் பல்கலைக்கழக பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்தனர்.

எக்ஸ்ரே,  ஸ்கேன் முடிவுகளின்படி, 40 செ.மீ நீளமுள்ள இரும்புக் கம்பி, மூளையின் முக்கிய இரத்த நாளங்களில் இருந்து வெறும் 2 மில்லி மீட்டர் தூரத்தில் இருந்தது. துயரத்திலும் இந்த அதிர்ஷ்டம் தான் அவர் உயிர் பிழைக்க காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தீயணைப்புப் படையினர் அழைக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு முன் வெளியிலிருந்த கம்பியின் பகுதியை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். அந்த கம்பி மேலே கிளிப் போன்ற அடிப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருந்ததால், அதை அகற்றுவது மிகவும் சிக்கலானதாக இருந்தது. வாய், கண்கள் மற்றும் மூளையை பாதிக்காமல் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனாலும்,  திறமையுடன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எந்த கூடுதல் பாதிப்பும் ஏற்படாமல் கம்பியை வெற்றிகரமாக அகற்றினார்கள்.

பின்னர் ICU-வில் பல நாட்கள் தொற்றுக்கு எதிராக போராடிய அக்யாங், ஒரு மாதம் சிகிச்சை பெற்ற  மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அவரின் வலது கண்ணில் சிறிய பார்வைக் குறைபாடு இருந்தாலும்,  குரலில் எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

“இந்த சம்பவம் குறித்து நினைத்தாலே இன்னும் பயமாக உள்ளது. என்னை உயிருடன் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி என உயிர் பிழைத்த அக்யாங் தெரிவித்தார்.