கூகுள் இந்த ஆண்டுக்குள் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள கூகுள் அசிஸ்டென்ட் என்ற சேவையை நிறுத்தி அதற்கு பதிலாக ஜெமினியை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜெமினிக்கு மாற்றும் செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், லட்சக்கணக்கான பயனர்கள் மாற்றத்தை ஏற்றுள்ளதாகவும், கூகுள் தெரிவித்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் பல மொபைல் பயனர்கள் ஜெமினிக்கு மாறுவார்கள் என்றும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பெரும்பாலான மொபைல் சாதனங்களில் இருந்து கூகுள் அசிஸ்டென்ட் நீக்கப்படும் என்றும், அதுமட்டுமின்றி மொபைல் அப் ஸ்டோர்களில் கூட இனி அசிஸ்டென்ட்டை டவுன்லோடு செய்ய முடியாது என்றும் தெரிகிறது.
கூகுள் கடந்த 2016ஆம் ஆண்டு கூகுள் அசிஸ்டென்ட்டை என்ற அம்சத்தை அறிமுகப்படுத்திய போது, குரல் மூலம் நமது கட்டளையை நிறைவேற்றும் ஒரு அம்சமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது இதே வேலையை ஜெமினி செய்வதால் அசிஸ்டென்ட்டை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மொபைல் சாதனங்களில் மட்டுமின்றி கூகுள் டேப்லெட்கள், கார்கள், மற்றும் ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் போன்ற சாதனங்களிலும் ஜெமினி ஏஐ டெக்னாலஜியை மேம்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது.
அசிஸ்டென்ட்டை நிறுத்துவதற்கு முன், ஜெமினி பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி உள்ளதாகவும், கடந்த ஆண்டு அறிமுகமான பிறகு, ஜெமினி 40 க்கும் மேற்பட்ட மொழிகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் விரிவடைந்துள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூகுள் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தினந்தோறும் ஜெமினி அனுபவத்தின் தரத்தை மேம்படுத்துவதிலும், குறிப்பாக கூகுள் அசிஸ்டென்ட்டை நம்பி இருந்தவர்களுக்கு சிறப்பாக சேவை செய்ய செயல்படுகிறோம் என்று தெரிவித்தார்.
அதோடு, இசையை இயக்குவது, டைமர்கள் அமைத்தல், அல்லது லாக் ஸ்க்ரீனில் இருந்து செயல்படுத்துதல் போன்ற அதிகம் கோரப்பட்ட அம்சங்களுக்கும் செயலியை புதுப்பித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
ஜெமினியின் திறன்கள், கூகுள் அசிஸ்டென்ட்டை விட அதிகமாக இருக்கின்றன, மேலும் மல்டிமோடல் உரையாடல்களுக்கு ஜெமினி லைவ் மற்றும் ஆழ்ந்த ஆராய்ச்சிக்காக Deep Research போன்ற அம்சங்களை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
2025 மார்ச் மாதம், கூகுள் டீப் மைண்ட், ஜெமினி ரோபோட்டிக்ஸ் மற்றும் ஜெமினி ரோபோட்டிக்ஸ்-ER ஆகிய இரண்டு புதிய AI மாதிரிகளை அறிமுகப்படுத்தியது. மேலும் ஜெமினி 2.0 மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவை, ரோபோக்களை கட்டுப்படுத்தவும், சூழல்களை புரிந்துகொள்ளவும் திறன்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.