தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு கோர சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு ஒரு ரத்த சாட்சியாக மாறியுள்ளது. “பாதுகாப்பான மாநிலம்” என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் தொடர்ச்சியாக நடக்கும் இந்த குற்றச்சம்பவங்கள், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
குளத்தூரில் பிளஸ் டூ மாணவி மாயமானபோது உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையின் அலட்சியம் ஒரு உயிரை பறித்துள்ளது. காவல்துறை தேடி தராத மகளின் சடலத்தை, பெற்றோரும் ஊர் மக்களுமே புதர்மறைவில் தேடி எடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. விவகாரம் பெரிதாகி போராட்டங்கள் வெடித்த பிறகு, சம்பிரதாயமாக சில அதிகாரிகளை இடைநீக்கம் செய்வதால் இழந்த உயிரை மீட்டுவிட முடியுமா?
குற்றவாளி தர்ம முனீஸ்வரன் என்பவர் ஏற்கனவே ஒரு பாலியல் கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர். இத்தகைய ஆபத்தான கிரிமினல்கள் ஊருக்குள் சுதந்திரமாக நடமாடுவதை கண்காணிக்க தவறிய உளவுத்துறையின் தோல்வியே இந்த இரண்டாம் கொலைக்கு காரணமாகியுள்ளது.
கடந்த இரு வாரங்களில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த கொடூரங்கள் இதோ:
மதுராந்தகம்: 14 வயதுச் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதில் அரசியல் தொடர்பு கொண்டவர்கள் கைதாகி இருப்பது வேதனையின் உச்சம்.
சேலம்: வயது முதிர்ந்தவர் என்றும் பாராமல் 66 வயது முதியவர் மீது நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறல்.
சென்னை: தலைநகர் அயனாவரத்தில் ஏழு வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமை.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக மார்தட்டி கொள்ளும் அரசு, கள யதார்த்தத்தை உணர வேண்டும். ஒரு எம்.எல்.ஏ சொன்னால்தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்ற நிலை இருந்தால், சாமானிய மனிதன் யாரை நம்பி நீதி கேட்பான்? போதை பொருட்களின் தடையற்ற புழக்கமே இத்தகைய வக்கிரமான குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு என்பது வெறும் புள்ளிவிவரங்களில் மட்டும் இருந்தால் போதாது; அது ஒவ்வொரு பெண்ணும் அச்சமின்றி வீதியில் நடக்கும்போது உணரப்பட வேண்டும். இல்லையெனில், அரசு சொல்லும் ‘விடியல்’ என்பது வெறும் காகித வார்த்தையாகவே முடிந்துவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
