Vande Metro train: விழுப்புரம், வேலூருக்கு வேறலெவல் குட்நியூஸ்.. சென்னை வந்தே மெட்ரோ ரயிலில் சூப்பர் வசதிகள்

By Keerthana

Published:

சென்னை: வந்தே பாரத்தை தொடர்ந்து இந்தியாவில் 240 கிமீ தூரத்திற்குள் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக பெரம்பூர் ஐ சி எப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயில் முதற்கட்டமாக சென்னை-திருப்பதி, சென்னை கடற்கரை – காட்பாடி என 240 கிலோமீட்டருக்குள் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது..

12 பெட்டிகளை கொண்ட வந்தே மெட்ரோ ரெயிலில் ஏ சி வசதி, பயணிகளை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற வசதிகள் உள்ளன. செல்போன் சார்ஜிங் வசதி, டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் கண்காணிப்புக் கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 100 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் வரை சர்வ சாதாரணமாக நிற்க முடியும். அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில், உள்வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரயிலில் வெறும் இரண் முதல் இரண்டரை மணி நேரத்தில் இரு முக்கிய நகரங்களுக்கு போக முடியும்.

தினசரி வேலைக்கு செல்வோர், அவசர பயணிகள் எல்லாரும் பேருந்துக்கு மாற்றாக இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் இந்த திட்டம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக, சென்னை கடற்கரை-காட்பாடி இடையே வந்தே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் வந்தே மெட்ரோ ரெயில் வில்லிவாக்கத்தில் இருந்து நேற்று காலை 8 15 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு சென்னை கடற்கரைக்கு சென்றது. தொடர்ந்து, அங்கிருந்து காலை 9 30 மணிக்கு புறப்பட்டு, வில்லிவாக்கத்தை காலை 10 மணிக்கு அடைந்தது.

அங்கு ரெயில்வே பாதுகாப்பு முதன்மை கமிஷனர் ஜனக் குமார் கர்க், ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு உயரதிகாரிகள், ஐ சி எப் அதிகாரிகள் ஆகியோர் ரெயிலில் ஏறினார்கள். தொடர்ந்து, வில்லிவாக்கத்தில் இருந்து காலை 10 15 மணிக்கு அந்த ரயில் புறப்பட்டது.

சோதனையின் போது வந்தே மெட்ரோ ரயில் 100 கிலோ மீட்டர் முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. ரெயிலின் பாதுகாப்பு, அதிர்வு, வேகம் சிக்னல் தொழில்நுட்பம், ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் சரியாக நிற்கிறதா ஆகியவை இந்த சோதனை ஓட்டத்தின்போது ஆய்வு செய்யப்பப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம் திருப்தி அளித்ததால் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு ரெயில் நிலையம் வரை வந்தே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. பின்னர், வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து பகல் 12 45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.10 மணிக்கு சென்னை வில்லிவாக்கம் வந்தடைந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வந்தே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடந்துள்ளதால் மின்சார ரெயிலுக்கு மாற்றாக இந்த ரெயிலை பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தெற்கு ரெயில்வே முடிவு செய்திருக்கிறது. மின்சார ரெயில்கள் போலவே, வந்தே மெட்ரோ ரயில்களிலும் பயணம் செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவே டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் எடுத்து கொண்டு ஏறி பயணிக்க முடியும். மேலும், இந்த மாத (ஆகஸ்டு) இறுதிக்குள், வந்தே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு ஏதுவாக ரயில்வே நிர்வாகம் பயண அட்டவணைகளை தயார் செய்து வருகிறது. தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் வழித்தடத்தில் இந்த ரயில்களை இனி அதிகம் பார்க்க முடியும்.