Teacher | தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் ஆசிரியர்கள் ஹேப்பி.. உடனே வந்த அரசாணை

Published:

சென்னை : தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தற்காலிக ஆசிரியர்கள் 1282 பேர் அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும்,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் 2011-12-ம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 710 ஊராட்சி, ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அப்படி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 3,550 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. இதேபோல் 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் என மொத்தம் 4,970 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த 4,970 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் வருகிற 2028-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரையிலான 5 ஆண்டுகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின்கீழ் 2011-12-ம் நிதியாண்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்ய 1,282 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே 1,282 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு (2029 ஜூன் மாதம் வரை) தொடர் பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் கால தாமதமின்றி கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு 2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நியமன தேர்வு நடைபெற்ற நிலையில், 360 கூடுதல் காலி பணியிடங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகப்படுத்தியழ. அதன்படி மொத்தமாக 3192 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மே மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...