தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்களுக்கு வேறு துறை ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்பார் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று காலை அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை அடுத்து தற்போது புதிதாக பதவி ஏற்ற டிஆர்பி ராஜா அவர்களின் துறை மற்றும் ஒரு சில அமைச்சர்களின் துறை மாற்றப்பட்டது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன்படி நிதி அமைச்சர் ஆக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தங்கம் தென்னரசு நிதி அமைச்சர் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதிதாக பதவியேற்ற டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை அமைச்சர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த துறை மனோ தங்கராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது..
மேலும் தற்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்து வரும் சுவாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.