காமராஜர் என்றதுமே நினைவுக்கு வருவது எளிமையும் அவரது கம்பீரமான தோற்றமும் தான். ஒன்பது ஆண்டுகாலம் தமிழகத்தின் முதல்வராய் இருந்து தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி செய்தவர் கர்மவீரர் காமராஜர்.
தலைவர் என்பவர் தொண்டு செய்பவராக, இலட்சிய பிடிப்பு நிறைந்தவராக, மூவாசைகளையும் துறந்தவராக இருத்தல் வேண்டும். அப்படிப் பார்த்தால் கர்மவீரர் காமராசர் ஒரு உன்னத தலைவர்.
ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வயிற்றுப் பசியோடு அவர்களின் அறிவுப் பசியையும் தீர்த்திட வித்திட்ட ஏழைப் பங்காளர்.
இவரது ஆட்சிக் காலத்தில் தான் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், நெய்வேலி நிலக்கரி திட்டம், திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, கிண்டி டெலி பிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, கிண்டி அறுவை சிகிச்சை கருவி தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை, சங்ககிரி சிமெண்ட் தொழிற்சாலை அரக்கோணம் இலகுரக ஸ்டீல் பிளான்ட், சமயநல்லூர் அணுமின் நிலையம் இவை மட்டும் இன்றி 159 நூற்பு ஆலைகள் 14 சர்க்கரை ஆலைகள் என பல தொழிற்சாலைகளை நிறுவி தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டு தமிழகத்தையே தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக மாற்றிய ஓர் அற்புத முதலமைச்சர் காமராஜர்.
இன்றளவிலும் விவசாயிகள் நம்பிக்கொண்டிருக்கும் பாசன திட்டங்களான காவேரி டெல்டா, மணிமுத்தாறு, ஆரணி ஆறு, சாத்தனூர், அமராவதி, கிருஷ்ணகிரி, வைகை, மேட்டூர், நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி போன்ற பல பாசன திட்டங்களை உருவாக்கியவர்.
மாவட்ட ஆட்சித் தலைவர்களை சந்திக்கும் பொழுது அவர்கள் முன்னிலையிலேயே ஏழை எளிய மக்களை சந்தித்து அவர்களின் சிக்கல்களையும் இன்னல்களையும் நலத்திட்டங்கள் முறையாக வந்து சேருகிறதா என்பதையும் விசாரித்து தெரிந்து கொள்வார்.
இவரது ஆட்சிக் காலத்தில் தான் 14,000 மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்ட பொழுது ராணுவ வீரர்களை சந்தித்து வீர உரையாற்றி போர்க்களம் கண்ட நிகழ்வும் ராமநாதபுரத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பொழுது அதிகாரிகளே எப்படி செல்வது என்று தினறிய நிலையில் ஒரு முதல்வராய் வெள்ளத்தையும் மழையையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்தித்த நிகழ்வும் இவரது அஞ்சா நெஞ்சத்தை பறைசாற்றும். இவர் ஆற்றிய வீர உரையை கேட்ட நம் ராணுவ வீரர்கள் இவரை காலா காந்தி (கருப்பு காந்தி) என்று கோஷம் எழுப்பி மரியாதை செலுத்தினர்.
இந்திய நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு இருமுறை கிடைத்த போதும் அதை ஏற்க மறுத்த தலைவர். இப்படி பல சாதனைகள் புரிந்த போதும் வாழும் காலம் முழுவதும் எளிமையாகவே வாழ்ந்த இவர் உண்மையிலேயே கிங் மேக்கர் தான்.
தமிழக அரசு ஏழை எளிய மாணாக்கர்கள் கல்விக்கு இவர் ஆற்றிய பணியை போற்றும் வகையில் இவர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக 2006ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.