அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் சமீபத்தில் திடீரென டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினார் என செய்திகள் வெளியாகின.
இதனை அடுத்து, அதிமுக-பாஜக கூட்டணி கிட்டத்திட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், இந்த கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், திடீரென முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று இருப்பதாகவும், அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் அவர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் டெல்லி சென்றதற்கான முக்கிய காரணம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தனக்கு பெற்றுத்தர வேண்டும் எனக் கேட்பதற்காகவே தான் என்றும், ஒரே நபர் இரண்டு பதவிகளை வைத்திருக்கக் கூடாது என்பதையும் அவர் முன்வைத்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தனக்கு வாங்கி தர வேண்டும் என டெல்லியில் உள்ள முக்கிய பிரபலங்களிடம் செங்கோட்டையன் முறையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, பாஜக மேலிடம் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, அந்த பதவியை செங்கோட்டையனுக்கு வழங்க விரும்புவதாகவும், செங்கோட்டையன் தலைமையிலேயே அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை இதற்கு எடப்பாடி பழனிச்சாமி இணங்காவிட்டால், அதிமுகவையே செங்கோட்டையன் தலைமையின் கீழ் கொண்டு வர சில உள் வேலைகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
