குண்டர் சட்டம் ரத்து.. ‘சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

Published:

சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி போதிய காரணங்கள் இல்லாமல் அவசரகதியில் சவுக்கு சங்கருக்கு மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக கூறி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 14ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரும், சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே கரூரில் பண மோசடி வழக்கிலும் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். கரூர், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவபர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடம் 7 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்தது. இதேபோல் கோவை சைபர் கிரைம் வழக்கிலும் ஜாமீன் கிடைத்துவிட்டது. அத்துடன் டெல்லியில் உச்ச நீதிமன்றமும் சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

எனினும் குண்டாஸ் தேவையா இல்லை என்பதை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து குண்டாஸ் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது,

காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கர் தொடர்ந்து இதுபோல அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், அதனை தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கில் விசாரணையின் போத பேசிய நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதாவது, யூடியூப்களில் கருத்து தெரிவிக்கும் அனைவரும் கைது செய்யப்படுகிறார்களா? இதுவரை எத்தனை பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ வெளியிட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என எந்த அடிப்படையில் அரசு முடிவுக்கு வந்தது.

யூடியூப் சேனல்களில் வெளியிடப்படும் கருத்துக்களை நம்புவது மக்களின் தனிப்பட்ட விருப்பம் . எனவே அது சரியாக இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். நல்ல எண்ணம் கொண்டவர்கள் நல்ல வீடியோக்களை பார்ப்பார்கள், தவறான எண்ணம் கொண்டவர்கள் தவறான வீடியோக்களை பார்ப்பார்கள். அதனால், எந்த வீடியோவை பார்க்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் செய்திகள் அனைத்தும் உண்மையா? தொலைக்காட்சி சார்ந்த கட்சிகளுக்கு தானே சாதகமாக நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதை ஏன் கேட்க முடிவதில்லை? திரைப்படங்களில் ஏன் அரிவாள் கத்திகளுடன் காட்சிகள் வெளியிடுகின்றன. சமுதாயத்திற்கு தேவையான தத்துவத்தையா? காட்சிப்படுத்துகிறாரகள் ரவுடிகளின் மொழியில் பாடம் கற்பிக்கப்படுவார்கள் என சென்னை காவல்துறை ஆணையர் கருத்து தெரிவித்ததை தவறாகவும் எடுத்துக் கொள்ளலாம். அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை போற்றுவதும், எதிராக தீர்ப்பு வழங்கும் நீதிபதியை தூற்றுவதும் வாடிக்கையாக உள்ளது. தற்காக நடவடிக்கை எடுக்க முடியாது. அனைவருமே சமூக வளைதளங்களில் தவறாக பேசக்கூடாது என அறிவுறுத்த மட்டுமே முடியும். யாருடைய பேச்சு சுதந்திரத்திலும் தலையிட முடியாது.

அரசுக்கு எதிரான பதிவிடப்படும் வீடியோக்களை மக்கள் பார்க்கிறார்கள் என்றால், ஊழல் அதிகரித்துள்ளது என்பதே அர்த்தம். அரசு அலுவலகங்களில் ஊழல் என்பது இல்லையா?உச்சநீதிமன்ற நீதிபதிகளே நீதிமன்றங்களில் ஊழல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதை மறுக்க முடியுமா? சவுக்கு சங்கருக்கு தகவல்கள் கொடுப்பது யார்? அதை ஏன் விசாரணை செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கடந்த 06ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையல் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், போதிய காரணங்கள் இல்லாமல் அவசரகதியில் சவுக்கு சங்கருக்கு மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக கூறி தீர்ப்பளித்தனர்.மேலும், “வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.” என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

மேலும் உங்களுக்காக...