முதல்வர் அவர்களின் மருமகன் சபரீசன் திடீரென டெல்லி சென்றதாகவும், அங்கு திமுக எம்பிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்ததாகவும் வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் பொறுத்தவரை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், டெல்லி அரசியல் இதுவரை டிஆர் பாலு மற்றும் கனிமொழி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்தது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக டிஆர் பாலுவை விட கனிமொழியின் கை ஓங்கி வருவதாகவும், இதனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் சில வதந்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில், திடீரென சபரீசன் டெல்லி சென்றதாகவும், அங்கு இந்திய அளவிலான சில முக்கிய புள்ளிகள் பங்கேற்ற ஒரு ஸ்பெஷல் டின்னரில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முக்கியமான ஒப்பந்தங்கள் தொடர்பான சந்திப்பாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு முடிந்தவுடன், நாடாளுமன்றத்துக்குச் சென்ற சபரீசன், திமுக எம்பிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “சபரீசன் டெல்லி அரசியலுக்கு செல்லப் போகிறாரா?” என்ற சந்தேகம் திமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
மாநில அரசியலை ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கவனித்துக்கொள்ள, டெல்லி அரசியலை இனி சபரீசன் மேலாண்மை செய்யவிருக்கிறார் என்றும், அவருக்கு விரைவில் டெல்லியில் ஒரு பதவி கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த முடிவுகள் அனைத்தும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மட்டுமே எடுக்கப்படும் என்று திமுக வட்டாரங்களில் உள்ள சில முக்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.