தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவை தவிர்த்து, பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் தேசிய கட்சியான பாஜகவின் தேர்தல் வியூகங்கள் மிகவும் மந்தமாகவும், தெளிவற்றதாகவும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர். கூட்டணியை இறுதி செய்வதிலோ அல்லது தேர்தலை எதிர்கொள்வதற்கான புதிய திட்டங்களை வகுப்பதிலோ இந்தக் கட்சிகள் முனைப்பு காட்டாதது, அரசியல் களத்தில் ஒரு தேக்கநிலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒரு பெரிய சக்தியாக வளர முயலும் பாஜக, தனது கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்களில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை திரட்ட பாஜக முனைப்பு காட்டுவது போல, தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க ஆர்வம் காட்டாமல் உள்ளது.
அதிமுகதான் பெரிய கட்சி, அவர்கள் எப்படியும் திமுகவை எதிர்ப்பார்கள், நாம் வேடிக்கை பார்த்தால் போதும்” என்ற ஒருவிதமான மந்தமான மனநிலையிலேயே பாஜக செயல்படுவதாக தெரிகிறது.
புதிதாக அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்யின் தவெக மீதும் பாஜகவுக்கு அதிக கவனம் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர முடிந்தால், அது பெரிய பாய்ச்சலாக இருக்கும் என்று பாஜக தலைமை நம்புவதாக தெரிகிறது. ஆனால், அதுவரையிலும், அதிமுகவை பெரிதாகச் சீண்டாமல் அல்லது அதை சார்ந்தே அரசியல் நகர்வுகளை வைத்திருப்பது, களப்பணியாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, கூட்டணியை உறுதி செய்வதில் தயக்கம் காட்டி வருகிறது. அதிமுகவின் ஒரு பிரிவினர், நடிகர் விஜயின் அரசியல் வருகைக்காக காத்திருப்பதாகவும், அவர் வரும்போது கூட்டணி குறித்து முடிவெடுக்கலாம் என்றும் மந்தநிலையில் இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் விஜய், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்ததால் இனிமேலாவது ஈபிஎஸ் சுறுசுறுப்பாவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டபோதிலும், கணிசமான வாக்குகளை பெற்றதால், “எங்கள் வாக்கு வங்கி பலமாக உள்ளது, நாங்கள் பார்த்து கொள்வோம்” என்ற ஒருவிதமான அதிகப்படியான தன்னம்பிக்கை அதிமுகவுக்குள் இருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது, கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை மீண்டும் கவர எந்த முயற்சியும் எடுக்காததற்கு காரணமாக இருக்கலாம்.
அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் இதுவரை உறுதியான முடிவை எடுக்காததற்கு, இந்த கூட்டணியின் நிச்சயமற்ற தன்மையே காரணம். பாமகவும் தேமுதிகவும் மீண்டும் அதிமுகவுடன் இணைந்தாலும், அவர்களின் வாக்கு சதவீதம் தனித்துப் போட்டியிடுவதால் வரும் வாக்குகளை விடப் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. பாமக வட மாவட்டங்களில் குறிப்பிட்ட செல்வாக்கைக் கொண்டிருந்தாலும், அதன் ஒட்டுமொத்தப் பங்களிப்பு தேர்தல் முடிவை மாற்றும் அளவுக்கு பெரியதல்ல. தேமுதிகவின் வாக்கு வங்கியும் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு வெகுவாக குறைந்துவிட்டது.
அதிமுக மற்றும் பாஜகவின் மந்தமான அணுகுமுறையால், இவர்களுடன் இணைந்தால் அதிகாரம் அல்லது தொகுதி பங்கீட்டில் நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் சிறிய கட்சிகளுக்குள் எழுந்துள்ளது.
மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதிலோ, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதிலோ கவனம் செலுத்த போதிய நேரம் இல்லை என்ற சூழல் உள்ளது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்ற முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து முழுவதுமாக நீக்குவது, இரட்டை இலை சின்னம், கட்சிப் பெயர் உரிமை உள்ளிட்ட உட்கட்சி பூசல்களை சமாளிப்பதற்கே ஈபிஎஸ்-ஸின் பெரும்பாலான நேரம் வீணாகி வருகிறது. இதனால், எதிர்கால தேர்தல் வியூகங்கள், களப்பணிகளை தீவிரப்படுத்துதல், புதிய திட்டங்களை அறிவித்தல் போன்ற முக்கியப் பணிகளில் அதிமுக மந்தமாக உள்ளது.
அதிமுக மற்றும் பாஜகவின் இந்த மந்தமான அணுகுமுறை நீடித்தால் விஜய்க்கு தான் லாபம் என அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறுகின்றனர். காலங்காலமாக அதிமுக, திமுக முதல் இரண்டு இடங்களை பிடித்து வந்த நிலையில், அதிமுகவின் மந்தநிலை காரணமாக முதல் இரண்டு இடங்களை திமுக, தவெக பிடிக்கும் நிலை ஏற்படும் என அதிமுகவுக்கு அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இனியாவது ஈபிஎஸ் சுதாரித்து வெற்றி அல்லது 2வ்து இடத்தை பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
