வங்கக்கடலில் மோக்கா புயல்.. எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு?

Published:

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்றும் அதன் பிறகு வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
மே 7ஆம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு, மே 9ஆம் தேதி புயலாக உருவாகும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மேலும் இந்த புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புயல் காரணமாக இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரையிலான சூறைக்காற்று வீசும் என்றும் இதனால் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் பகுதிகள், மத்திய வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை சூறைக்காற்று வீசும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆழ் கடலில் ஏற்கனவே மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அக்னி நட்சத்திர வெயில் சுட்டரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக தமிழக கடற்கரை ஓர பகுதிகளில் மட்டுமின்றி பல பகுதிகளில் இன்னும் ஒரு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் வெப்பத்திலிருந்து மக்கள் தப்பித்துள்ளனர் என்பதும் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலையை மக்கள் அனுபவிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிக அரிதாகவே மே மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயல் உருவாகும் என்பதும் அந்த அரிதான நிகழ்வு 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...