தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலையில் காலாவதியாகி விட்டது. காலாவதியான சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணம் வசூலிக்கக்கூடாது. பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியாகியும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் 4 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக அமைச்சர் எவ வேலு கூறினார்.
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு இடையே உள்ள கடல் நடுவே கண்ணாடி இழை பாலம் ரூ.37 கோடி செலவில் அமைக்கும் பணி எதிர் வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் பணிகள் முடிந்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திறக்கப்படும்.
மார்த்தாண்டம் உயர்மட்ட இரும்பு மேம்பாலம் 2.4 கி.மீ நீளத்திற்கு ரூ.320 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பாலத்தின் தூண்கள் 101-ற்கும் 102-க்கும் இடையில் உள்ள பாலத்தின் ஓடு தளத்தில் கம்பி தெரியும் அளவுக்கு பழுது ஏற்பட்ட நிலையில், இதனை சரி செய்ய நுண் நுட்ப கான்கீரிட் மூலம் தார் சாலை போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டன. காலாவதியான சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணம் வசூலிக்கக்கூடாது. பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியாகியும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் 4 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம்.
தமிழ்நாட்டில் காலம் கடந்து 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் காலாவதியான பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை போன்ற சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதியுள்ளோம்” இவ்வாறு கூறினார்.