இதனை அடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல மாநகர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து மாநகர பேருந்து பிடித்து சென்னைக்கு போக்குவரத்து நெரிசலையும் தாண்டி வருவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது என்று பயணிகள் புலம்பி வருகின்றனர்.
தாம்பரம் வரை தென் மாவட்ட பேருந்துகள் வந்ததால், அங்கிருந்து பயணிகள் தங்களுடைய இடத்திற்கு செல்வதற்கு எளிதாக இருந்த நிலையில், தற்போது கிளாம்பாக்கத்துடன் பேருந்துகள் நிறுத்தப்படுவதால், மாற்று வழியை தேடி வருகின்றனர்.
பொதுவாக, தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் செங்கல்பட்டு வழியாக வருவதால், பரனூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் ரயில் நிலையங்களை கடந்தே கிளாம்பாக்கம் வருகிறது. எனவே, இவற்றில் ஏதாவது ஒரு ரயில் நிலைய நிறுத்தத்தில் பயணிகள் இறங்கி, அங்கிருந்து ரயிலில் சென்னை எழும்பூர் அல்லது கடற்கரை செல்லலாம். இது மிகவும் எளிதாக இருக்கும்.
குறிப்பாக, பொத்தேரி ரயில் நிலையத்தையே பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். காரணம், பேருந்து நிலையம் அருகே இந்த ரயில் நிலையம் இருப்பதால், அது மிகவும் சௌகரியமாக உள்ளது.
எனவே, தென் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் பொத்தேரி அல்லது பரனூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மின்சார ரயிலில் வந்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாக பயணம் செய்யலாம் என பதிவு செய்து வருகின்றனர்.